6. கடலாடு காதை




10



கடுவிசை அவுணர் கணங்கொண் டீண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழன் மன்னற்குத் தொலைந்தன ராகி
நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவே லண்ணற்குத் தேவ னேவ
இருந்துபலி யுண்ணும் இடனும் காண்கும்



7
உரை
13

       கடுவிசை அவுணர் கணங்கொண்டு ஈண்டி - மிக்க வேகத் தினையுடைய அவுணர்கள் கூட்டமாக நெருங்கிவந் தெதிர்த்து, கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி - இந்திரனது நகரைக் காத்த புலி போலும் வலியையுடைய வீரக்கழலணிந்த முசுகுந்தனுக்குத் தோற்று, நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல் விட்ட - பின்பு தம்மில் ஒத்துக்கூடி அம் முசுகுந்தனது நெஞ்சம் இருள் மிகும் படி விடுத்த, வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் - இருளம் பினைப் போக்கிய மிக்க பெரிய பூதமானது, திருந்து வேல் அண்ணற்குத் தேவன் ஏவ - திருந்திய வேலையுடைய அம் முசுகுந்தன் பொருட்டு இந்திரன் ஏவுதலினாற் போந்து, இருந்து பலி உண் ணும் இடனும் காண்கும் - புகாரிலிருந்து பலியுண்ணும் இடமாகிய நாளங்காடியையும் காண்பேம் ;

       ஊக்கம் - வலி, ஊக்கத்து மன்னன் என்க. நெஞ்சும் என உம்மை விரித்துப் புறக்கண்ணன்றி அகக்கண்ணாய நெஞ்சமும் இருள் கூர வென்க. நிகர்த்து - ஒத்துக் கூடி. வஞ்சம் என்றது வஞ்சத்தால் விட்ட இருட்கணையை. ஒரு காலத்தில் விண்ணுலகிலே சேமத்தில் வைக்கப்பட்டிருந்த அமிழ்தத்தைக் கலுழன் கவர்ந்து சென்றனன் என்பதும், அதனை மீட்கக் கருதிய இந்திரன், யான் சென்று வருங்காறும் இந்நகரினைக் காப்போர் யார் எனச் சிந்தித்த பொழுது முசுகுந்தன் 'யான் பாதுகாப்பேன்' என மொழிந்தான் என்பதும், அது கேட்டு இந்திரன் மகிழ்ந்து, 'இது நின்வழி நிற்பதாக' என ஒரு பூதத்தை நிறுத்திச் சென்றனன் என்பதும், அக்காலை அவுணர்கள் பெருந்திரளாக வந்து பொருது தோற்றோடியவர்கள் பின்பு ஒருங்குகூடிச் சூழ்ச்சி செய்து பேரிருட்கணை யொன்றை விடுத்தனர் என்பதும், அதனால் எங்கணும் இருள் சூழலும் முசுகுந்தன் செய்வதறியாது நெஞ்சம் திகைத்து நிற்புழி, அப்பூதம் அவ்விருளைப் போக்க, அவன் மீட்டும் அவுணர் படையை வென்றான் என்பதும், மீண்டுவந்த இந்திரன் நிகழ்ந்தவற்றை அறிந்து அப்பூதத்தை அம் மன்னனுக்கே மெய்காவலாகுமாறு பணிக்க,
அஃது ஆங்கு நின்றும் போந்து புகார்நகரில் நாளங்காடியில் இருந்து பலியேற்று வருவதாயிற்று என்பதும் ஈண்டுக் கூறியவாற்றானும், இதனுரையில் அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய மேற்கோட் செய்யுளொன்றானும் அறியப்படுகின்றன. அச்செய்யுள் : ''முன்னாளிந்திரன்........., காவலழித்துச் சேவல்கொண் டெழுந்த, வேட்கை யமுத மீட்க வெழுவோன், இந்நகர் காப்போர் யாரென நினைதலும், நேரிய னெழுந்து நீவரு காறும், தார்கெழு மார்ப தாங்கலென் கடனென, உவந்தனன் கேட்டுப் புகழ்ந்தவிப் பூதம், நின்வழி யாகென நீறீஇப் பெயர்வுழிக், கடுவிசை யவுணர் கணங்கொண் டீண்டிப், பொருதுபோர் தொலைந்தன ராகிப் பெரிதழிந், தாழ்ந்த நெஞ்சிற் சூழ்ந்தனர் நினைத்து, வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது, வேற லரிதெனத் தேறினர் தேறி, வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின், அயின்முகங் கான்ற வாரிருள் வெயிலோன், இருகணும் புதையப் பாய்தலி னொருகணும், நெஞ்சங் காணா நிற்ப நின்ற, வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்'' என்பது. முசுகுந்தன் பரிதி மரபினனாய சோழர்குல முன்னோ னாதலின் அவன் பதியாகிய புகாரின்கண் பூதம் வந்து தங்குவ தாயிற்று.