6. கடலாடு காதை




75

அந்தரத் துள்ளோர் அறியா மரபின்
வந்து காண்குறூஉம் வானவன் விழவும்
ஆடலுங் கோலமும் அணியுங் கடைக்கொள
ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்பப்



72
உரை
75

       அந்தரத்து உள்ளோர் - விண்ணுலகிலுள்ள தேவர்களும், அறியா மரபின் வந்து காண்குறூஉம் - பிறர் அறியாதபடி உள்வரி கொண்டுவந்து காணும், வானவன் விழவும் - இந்திர விழவும், ஆடலும் கோலமும் அணியும் கடைக் கொள - மாதவியாடலும் அவ்வாடற்குச் சமைந்த கோலமும் ஆடுதலாற் பிறந்த அழகும் முடிந்தமையால், ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப - வெறுப்போ டிருந்த கோவலன் மகிழும்படி ;

       ஆடற்கோலம் என்று பாடங்கொண்டு, மாதவி பதினோராடலுக்கும் கொண்ட கோலம் என்பர் அரும்பதவுரையாசிரியர். அணி - பாவ ரசம் ; மெய்ப்பாடு. ஊடல் - வெறுப்பு ; அகத்து நிகழ்ந்த வெறுப்பை முகம் தோற்றுவித்தலின் "ஊடற் கோலமோடு" என்றார். வெறுப்பிற்குக் காரணம் திருநாள் முடிந்தமை. அன்றி, மாதவியின் ஆடல் முதலியன தனது அறிவு நிறை யோர்ப்புக் கடைப்பிடிகளைக் கவர்ந்தமையின் பிறர்க்கும் இவ்வாறாம் என்னும் வெறுப்பு என்றும், பலரும் இவளைப் பற்றிப் பார்த்தலிற் பொறாமையால் வந்த வெறுப்பு என்றும் கொள்ளலுமாம்.