6. கடலாடு காதை


பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்
நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக்



87
உரை
88

       பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் - பருமுத்தின் கோவை முப்பத்திரண்டாற் செய்த விரிசிகை யென்னும் அணியை, நிறம் கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ - நீல நிறம் விளங்கும் பூத்தொழிலையுடைய நீலச் சாத ருடையின்மீதே உடுத்து ;

       பிறங்கிய முத்து - பருமுத்து. காழ் - கோவை. முத்தரை - அரையின் முத்துவடம் என்பர் அரும்பதவுரை யாசிரியர். முத்தரையென்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு முத்து எனப் பொருள் கோடல் பொருந்தும்; என்னை? ஈண்டு அடியார்க்குநல்லார் காட்டிய மேற்கோள் ஒன்றிலும் "பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்" என்றே காணப்படுதலின் ; பெரு முத்தரையர் என்பதும் பெரு முத்துடையார் என்னும் பொருளினதாகும் ; பெருமுத்தரை - பெரு முத்து, நிறம் கிளர் - முத்தின் நிறம் விளங்குதற்கு ஏதுவாகிய என்றுமாம். விரிசிகை விரிந்து கலைபோன்றிருத்தலின் உடீஇ என்றார். விரிசிகையுடன் துகிலை யுடுத்து என்றுமாம்.