6. கடலாடு காதை

95

வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து



95
உரை
98

       வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் - வாளைமீனின் அங்காந்த வாயை யொக்கும் முடக்கு மோதிரமும், கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் - ஒளிமிக்க செந்நிறம் விளங்கு கின்ற மாணிக்கம் பதித்த மோதிரமும், வாங்கு வில் வயிரத்து மர கதத் தாள்செறி - பக்கத்தே வளைந்து திரையும் ஒளியையுடைய வயிரம் சூழ்ந்த மரகதமணித் தாள்செறியும் என்னும் இவற்றை, காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து - காந்தள் மலர்போலும் மெல்லிய விரல்கள் மறையும்படி அணிந்து ;

       வாளையின் அங்காந்த வாயை வணங்குதலுறுவிக்கும் நெளியென்றுமாம். கேழ் - முன்னது ஒளியும், பின்னது நிறமுமாம். கிளர் மணி மோதிரம் - இரத்தினங் கட்டின அடுக்காழியென்பது அரும்பதவுரை. வாங்கு வில் - வளைந்த விற்போல் வளைந்து செல்லும் ஒளி. வாள்போன்ற ஒளி வாள் எனவும், விற்போன்ற ஒளி வில் எனவும் பெயர் கூறப்படும் என்க. தாள் செறி - விரலடியிற் செறிப்பது.