6. கடலாடு காதை





125

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின்
மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு
அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயருந்
திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து



121
உரை
127

       கொடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை - கோடியென்னும் எண்ணைப் பலவாக அடுக்கப்பட்ட வளவிய பொருட்குவியலையுடைய, மாடம் மலி மறுகிற் பீடிகைத் தெருவின் - மாடங்கள் நிறைந்த குறுந்தெருக்களையுடைய ஆவண வீதியின் கண், மலர் அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்து ஆங்கு-மலர் அணியும் விளக்கோடே மாணிக்க விளக்குக்களையும் எடுத்து அவ்விடத்தே, அலர் கொடி அறுகும் நெல்லும் வீசி - மலரையும் அறுகையும் நெல்லையும் தூவி, மங்கலத் தாசியர் - சுமங்கலி களான ஏவற் பெண்டிர், தம் கலன் ஒலிப்ப - தம் அணிகலன் ஒலிக்க, இருபடை மருங்கினும் திரிவனர் பெயரும் - இருமருங்கினிடத்தும் திரிந்து பெயர்தலைச் செய்யும், திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து - திருமகளுக்கு இருப்பிடமாகிய அவ் விடத்தை வேறாகக் கழிந்து ;

       மாடம் - சரக்கறைகள். மறுகு - குறுந்தெரு ; 1" குறுந்தெரு மறுகே" என்பது திவாகரம். பீடிகைத் தெரு - பெரிய கடைத் தெரு. அலரும் என எண்ணும்மை விரிக்க. மங்கலத் தொழில் செய்யும் தாசியர் என்றுமாம். தாசியர் - சிலதியர் ; ஏவன் மகளிர். மங்கலமாக வீசி யென்றும் உரைத்துக் கொள்க. அங்காடியின் செல்வமிகுதி கூறுவார் திருமகளிருக்கையென்று பெயர் கூறினார் ; இது பட்டினப்பாக்கத்தது. செவ்வனம் - முற்ற. எடுத்து-எடுப்ப என்றுமாம்.


1. சே. திவா. 5. இடப்பெயர