|
20
25
|
நாரதன் வீணை நயந்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரங் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்கா ளாகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவளெனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்கரவு அல்குல் ஆடலுங் காண்குதும்
|
|
நாரதன்
வீணை நயம்தெரி பாடலும் - யாழாசிரியனாகிய நாராத முனிவன் இசையின்பம் விளங்கப் பாடும்
பாடலும், தோரிய மடந்தை வாரம் பாடலும் - தோரிய மடந்தை பாடும் வாரப் பாடலும், ஆயிரம்
கண்ணோன் செவியகம் நிறைய - இந்திரனுடைய செவியிடம் நிறையும்படி, நாடகம் உருப்பசி
நல்காள் ஆகி - உருப்பசி நாடகம் நடித்திலள் ஆதலால், மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள் எனச் சாபம் பெற்ற - வீணை மங்கல மிழக்க மண்மிசைத் தங்குக ; இவள் மண்ணிடைப்
பிறக்க ; எனச் சபித்தலின் அதனைப் பெற்று வந்து பிறந்த, மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
- மங்கையாகிய மாதவியின் வழியிலே பிறந்த, அங்கு அரவு அல்குல் ஆடலும் காண்குதும் -
அரவு போலும் அல்குலையுடைய மாதவியின் ஆடலையும் அவ்விடத்துக் காண்பேம் ;
இவளது ஆடல் நெகிழ்ந்தமையால் அப்
பாடல்களும் சிதைந்தன வென்றார். ஆகி - ஆயினமையால். மண்மிசைத் தங்குக என்றதனை வீணைக்கும்
உருப்பசிக்கும் ஏற்றுக. அங்குக் காண்குதும் எனக் கூட்டுக. இவ் வரலாற்றை விளக்குதற்கு
அடியார்க்கு நல்லார் காட்டிய மேற்கோட் செய்யுள் :
''வயந்த மாமலை நயந்த முனிவரன், எய்திய
வவையினிமையோர் வணங்க, இருந்த விந்திரன் றிருந்திழை யுருப்பசி, ஆடனிகழ்க பாடலோ
டீங்கென, ஓவியச் சேனன் மேவின னெழுந்து, கோலமுங் கோப்பு நூலொடு புணர்ந்த, இசையு நடமு
மிசையத் திருத்திக், கரந்து வர லெழினியொடு புகுந்தவன் பாடலிற், பொருமுக வெழினியிற்
புறந்திகழ் தோற்றம், யாவரும் விழையும் பாவனை யாகலின், நயந்த காதற் சயந்தன் முகத்தின்,
நோக்கெதிர் நோக்கிய பூக்கமழ் கோதை, நாடிய வேட்கையி னாட னெகிழப், பாடன் முதலிய
பல்வகைக் கருவிகள், எல்லாம் நெகிழ்தலி னொல்லா முனிவரன், ஒரு தலை யின்றி யிருவர்
நெஞ்சினும், காமக் குறிப்புக் கண்டனன் வெகுண்டு, சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை, மாணா
விறலோய் வேணு வாகென, இட்ட சாபம் பட்ட சயந்தன், சாப விடையருள் தவத்தோய் நீயென,
மேவினன் பணிந்து மேதக வுரைப்ப, ஓடிய சாபத் துருப்பசி தலைக்கட்டுங், காலைக் கழையும்
நீயே யாகி, மலைய மால் வரையின் வந்துகண் ணுற்றுத், தலையரங் கேறிச் சார்தி யென்றவன்,
கலக நாரதன் கைக்கொள் வீணை, அலகி லம்பண மாகெனச் சபித்துத், தந்திரி யுவப்பத்
தந்திரி நாரிற், பண்ணிய வீணை மண் மிசைப் பாடி, ஈண்டு வருகெனப் பூண்ட சாபம், இட்டவக்
குறுமுனி யாங்கே, விட்டன னென்ப வேந்தவை யகத்தென்'' என்பது.
இவற்றானும், முன் அரங்கேற்று காதையில்
''தெய்வ மால் வரைத் திருமுனி யருள, எய்திய சாபத் திந்திர சிறுவனொடு, தலைக் கோற்
றானத்துச் சாப நீங்கிய, மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர்'' என்றுரைத்தது முதலியவற்றானும்
அறியப்படும் வரலாறாவது : ஒருகாலத்துப் பொதியின் முனிவனாகிய அகத்தியன் இந்திரனது
அவைக்கு வர, அப்பொழுது இந்திரன் பாடலோடு உருப்பசியின் ஆடல் நிகழ்கவெனப் பணித்தனன்
; ஆண்டு இந்திரன் மகனாகிய சித்திரசேனன் கரந்து வர லெழினியுடன் புகுந்துபாட, உருப்பசியும்
அவனும் ஒருவரையொருவர் கண்டு காமுற்றமையின் அவளது ஆடல் நெகிழ்ந்தது ; அதனால் ஏனைக்
கருவிகளெல்லாம் நெகிழ்ந்தன ; நாரதன் இதனை அறிவித்தல் கருதித் தனது யாழிற் பகை
நரம்பு படப் பாடினன் ; இவற்றையெல்லா முணர்ந்த குறுமுனிவன் நாரதனது வீணை மங்கலமிழப்ப
மண்ணிலே மணையாய்க் கிடக்குமாறும், உருப்பசி புவியிலே பிறக்குமாறும், சயந்தன் பூமியில்
மூங்கிலாய்த் தோன்றுமாறும் சபித்து, அவர்கள் வேண்டுதலாற் பின் சாபவிடை தந்தனன்
; என்பது. |
|