6. கடலாடு காதை


135




140




145

வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்
காழியர் மோதகத் தூழுறு விளக்கமும்
கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும்
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்
இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்
கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும்
எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கீண்டி



134
உரை
145

       வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் - எழுது வண்ணமும் சாந்தும் மலரும் பூசு சுண்ணமும் பண்ணிகார வகைகளும் விற்போர்கள் வைத்த விளக்குக்களும், செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் - செய்யுந் தொழில்களை வல்ல பணித்தட்டார் அணிகலஞ் செய்யுமிடங்களில் வைத்த விளக்குக்களும், காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் - பிட்டு வாணிகர் பிட்டு விற்றற்கு முறைமுறையாக வைத்த விளக்குக்களும், கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் - கரிய அகலையுடைய அப்பவாணிகர் குடத்தண்டில் வைத்த விளக்குக்களும், நொடை நவில் மகடூக் கடை கெழு விளக்கமும் - பல பண்டமும் விற்கும் மகளிர் தம் கடைகளில் வைத்த விளக்குக்களும், இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் - இடையிடையே மீன் விற்போர் விளக்குக்களும், இலங்குநீர் வரைப்பிற் கலம் கரை விளக்கமும் - கடலிடத்தே துறையறியாது ஓடும் மரக்கலங்களைக் குறி காட்டி அழைத்தற்கிட்ட விளக்குக்களும், விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும் - மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து அகப் படுக்கும் வலையையுடைய பரதவர் திமிலில்வைத்த விளக்குக்களும், மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் - மொழி வேறுபட்ட தேயத்தினர் வைத்துள்ள விடிவிளக்குக்களும், கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் - மிக்க பெரிய பண்டங்களையுடைய பண்டசாலை காப்போர் இட்ட விளக்குக்களும், எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி - அளவறியப் படாதனவாய் எங்கணும் பொருந்தி மிகுதலாலே ;

       மோதகம் - ஈண்டுப் பிட்டு, காரகல் - அப்பஞ் சுடும் அகல் குடைகால் விளக்கு எனப் பாடங் கொண்டு, காரகல் ஒன்றைத் தண்டைக் குடைந்திட்ட விளக்கு என்பர் அரும்பதவுரையாசிரியர். நொடை நவில் - விலையைக் கூறும் ; விற்கும் என்றபடி. கலம் - கப்பல் ; கரைதல் - அழைத்தல் ;

       1" வான மூன்றிய மதலை போல
       ஏணி சாத்திய வேற்றருஞ் சென்னி
       விண்பொர நிவந்த வேயா மாடத்
       திரவின் மாட்டிய விலங்குசுடர் ஞெகிழி
       உரவுநீ ரழுவத் தோடுகலங் கரையும், துறை "

என்றார் பிறரும், மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கம் என்பதற்குப், பாடை வேறுபட்ட தேயத்து மிலேச்சர் பிற துறைகளிற் போகாமற் பனைகளைக் காலாக நாட்டி அதன்மீதே மண்ணிட்டெரிக்கும் தீநா வென்னும் விளக்குக்கள் என்பர் அடியார்க்குநல்லார். ஈண்டுதல் - மிகுதல்; ஈண்டி - மிகுதலால் என்க.


1 பெரும்பாண். 346-51.