6. கடலாடு காதை





150

இடிக்கலப் பன்ன ஈரயிர் மருங்கிற்
கடிப்பகை காணுங் காட்சிய தாகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றுங்
கைதை வேலி நெய்தலங் கானற்



146
உரை
150

        இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில் - மாவின் கலப்பினையொத்த மிக நுண்ணிய மணலின்மீது இட்ட, கடிப்பகை காணும் காட்சியது ஆகிய - வெண்சிறு கடுகும் புலப்படக் காணும் காட்சியை யுடையதாகிய, விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் - மிக்க நீர்ப் பரப்பிலே மணம் பொருந்திய மலரையுடைய தாமரையை வேலியாகவுடைய மருதநிலம்போல, மாண்பு உறத் தோன்றும் - அழகுறத் தோன்றும், கைதை வேலி நெய்தல் அம் கானல் - தாழையை வேலியாகவுடைய நெய்தல் நிலத்திற் கழிக்கானற் கண்ணே ;

        இடி - இடிக்கப்பட்டது ; மா. இடிக் கலப்பு - தெள்ளாத மா. ஈர் அயிர் - மிக நுண்ணிய மணல். வேலியின் என்னும் இன்னுருபை மருதத்தொடு கூட்டி, நீர்ப் பரப்பில் தாமரை வேலியையுடைய மருதத்தின் தோன்றும் என்க. மருதத்தினும் என உறழ்ச்சியாக்கினும் அமையும். ஆகிய, தோன்றும் என்னும் பெயரெச்சங்கள் நெய்தலென்னும் பெயர்கொண்டு முடியும். அம், சாரியை.