6. கடலாடு காதை

155

அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும்
பரத குமரரும் பல்வே றாயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்



155
உரை
158

        அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் - அரச குமாரரும் அவருடைய உரிமைச் சுற்றமும், பரத குமரரும் பல்வேறு ஆயமும் - வணிக குமாரரும் அவருடைய பல்வேறு வகைப்பட்ட ஆய மகளிரும், ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் - ஆடல் மகளிரும் பாடல் மகளிரும், தோடுகொள் மருங்கில் சூழ்தரல் எழினியும் - தொகுதிகொண்ட இடந்தோறும் அத்தொகுதியும் சூழ்ந்துள்ள திரைச் சீலையும் என்னுமிவற்றின் ;

        உரிமைச் சுற்றமும் என்பதனைப் பரத குமரர்க்கும், பல்வேறாயமும் என்பதனை அரச குமரர்க்கும் கூட்டிக் கொள்க. வணிகருடைய உரிமை மகளிர் புனலாடல் மரபன்மையிற் கூறாராயினார் என்றுமாம். பல்வேறு ஆயம் - பரிசன மகளிரும் சிலதியர் முதலாயினாரும். ஆடுகளம் - அரங்கு. பாடுகளம் - கண்டம். களம் இரண்டும் அடை, தோடு - தொகுதி. அத் தொகுதியும் என விரித்துக் கொள்க.