6. கடலாடு காதை


160

விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக்



159
உரை
162

        விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் - விண்ணிலே சென்று பொருந்தும் பெரிய புகழையுடைய கரிகாற் சோழன், தண்பதம் கொள்ளும் தலைநாட்போல - புதுப் புனல் விழவு கொண்டாடும் தலைநாளிற்போல, வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை - வேறு வேறு கோலமும் வேறு வேறு ஆரவாரமும், சாறு அயர்களத்தின் வீறுபெறத் தோன்றி- விழாச் செய்யும் களத்திற்போல வீறுபெறத் தோன்றாநிற்க ;

        பொரு - பொருந்தும். தண்பதங் கொள்ளும் - புதுப்புனலாடும். தொகுதியின் கம்பலையும் எழினியின் கோலமும் தோன்ற வென எதிர்நிரனிறை. தலைநாட்போல, களத்தின் என்னும் உவம மிரண்டும் முறையே காலம் பற்றியும் இடம் பற்றியும் வந்தன. தோன்றி - தோன்றவெனத் திரிக்க.