கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழை - கடலினது புலால் நாற்றத்தைக் கெடுத்த மடலவிழும்
பூவையுடைய தாழையால், சிறை செய் வேலி அகவயின் - காவல் செய்யும் வேலியாகச் சூழப்பட்ட
உள்ளிடத்தே, ஆங்கு ஓர் புன்னை நீழல் - ஒப்பற்ற புன்னை மரத்தின் நீழலில், புதுமணற்
பரப்பின் - அழுக்கற்ற மணல் பரந்த நிலத்தே, ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சித்திரத்
திரையைச் சுற்றிலும் சேர வளைத்து, விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை - மேற்கட்டும்
கட்டியிடப்பட்ட யானைக் கொம்பாற் செய்த கால்களையுடைய கட்டிலின் மேலே, வருந்துபு
நின்ற வசந்தமாலை கைத் திருந்துகோல் நல்யாழ் செவ்வனம் வாங்கி - வருந்திநின்ற
வயந்த மாலையின் கையதாகிய திருந்திய நரம்பினையுடைய நல்ல யாழைச் செவ்வனே வாங்கி,
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவிதான் என் -
பெரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி கோவலனோடும் சேர விருந்தாள்.
யானைத் தந்தத்தாற் செய்யப்பட்டதாகலின்
வெண்கால் என்றார். வசந்தமாலை - மாதவியின் சேடி. அவள் வழிவந்ததனால் வருந்தி
நின்றாள் என்க. கோல் - நரம்பு. கொள்கை - என்றும் இருக்கு முறைமை. ஆங்கு, தன்,தான்,
என் என்பன அசைகள். நெய்தலங் கானலில் ஆயமொடு பொருந்தி விளையாடி அதன்பின் அமளிமிசைக்
கோவலனோடும் இருந்தனள் என்க. தோன்ற, ஒலிப்ப என்பன நிகழ்கால முணர்த்தின. மானமர்
நோக்கி, பூங்கொடி, மாதவி என்னும் மூன்றையும் சேரவைத்து ஓர் எழுவாயாக்குக.
பள்ளியுள் இருந்தோள் உவவுத் தலைவந்ததாகக்
கடல் விளையாட்டுக் காண்டல் வேண்டி அணிந்து வையமேறித் தெருவினைக் கழிந்து நடுவட்போகி
எய்திக் கானலில் ஆயமொடு பொருந்திப் பின் மணற் பரப்பிலே அமளிமீதே யாழ்வாங்கிக்
கோவலன் றன்னோடிருந்தாள் என முடிக்க.
இது நிலைமண்டில வாசிரியப்பா.
|