|
35
|
மாயோன் பாணியும் வருணப் பூதர்
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச்
|
|
மாயோன்
பாணியும் - திருமாலைப் பரவும் தேவ பாணியும், வருணப் பூதர் நால்வகைப் பாணியும் - வருணப்பூதர்
நால்வரையும் பரவும் நால்வகைத் தேவ பாணியும், நலம் பெறு கொள்கை வான்ஊர் மதியமும்
- பல்லுயிர்களும் தன் கலையால் நன்மை பெறுந் தன்மையுடைய வானில் ஊர்ந்து செல்லும் திங்களைப்
பாடுந் தேவ பாணியும், பாடி - பாடுதல் செய்து, பின்னர் - பின்பு.
மாதவி யாடிய பதினோராடல் கூறத் தொடங்கி,
முதற்கண் அவற்றிற்கு முன் பாடப்படும் தேவபாணி கூறுகின்றார். பாணி - இசையையுடையது ;
பாட்டு. பாண் - இசை. தெய்வத்தைப் பரவும் பாட்டுத் தேவபாணி எனப்படும், 1ஏனையொன்றே,
தேவர்ப் பராவுதன் முன்னிலைக் கண்ணே" என்பது காண்க. அஃது இயற்றமிழில் வருங்காற் கொச்சக
வொருபோகாயும், பெருந்தேவபாணி, சிறுதேவபாணி என இருவகைத்தாயும் வரும் என்பதும், அங்ஙனம்
வரும் தரவினை நிலையென அடக்கி, முகத்திற் படுந்தரவினை முகநிலை யெனவும், இடை நிற்பனவற்றை
இடைநிலை யெனவும், இறுதியில் நிற்பனவற்றை முரிநிலை யெனவும் பெயர் கூறுவர் என்பதும்,
அவை இசைத்தமிழின் கண்ணும் முகநிலை, கொச்சகம், முரி எனப்படும் என்பதும், மற்று, இசைப்பாவானது
செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி,
கானல்வரி, விரிமுரண், தலை போகு மண்டிலம் எனப் பத்துவகைப்படு மென்பதும், இன்னும்,
சிந்து, திரிபதை, சவலை, சமபாத விருத்தம், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபாணி,
வண்ணம் என ஒன்பது வகைப்படும் என்பதும், நாடகத் தமிழில் தேவபாணி வருங்காற் பல தேவரும்,
வருணப் பூதரும் அவரணியும் தாரும் ஆடையும் நிறனும் கொடி யும், அவராற் பெற வேண்டுவனவும்
கூறி மூவடி முக்கால் வெண்பாவால் துதிக்கப்படுவர் என்பதும் முறையே செய்யுளியலுடையார் இசை
நுணுக்க முடைய சிகண்டியார், பஞ்ச மரபுடைய அறிவனார், மதிவாணனார் முதலிய தொல்லாசிரியர்களின்
கொள்கைகளாம்.
இனி, பதினோராடற்கும் முகநிலையாகிய
தேவபாணியாவது காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி யென்ப. அது, "மலர்மிசைத் திருவினை
வலத்தினி லமைத்தவன் மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன், இலகொளித் தடவரை
கரத்தினி லெடுத்தவன் இன நிரைத் தொகைகளை யிசைத்தலி லழைத்தவன், முலையுணத் தருமவள்
நலத்தினை முடித்தவன் முடிகள்பத் துடையவ னுரத்தினையறுத்தவன், உலகனைத் தையுமொரு பதத்தினி
லொடுக்கினன் ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே" என்பது. இஃது எண்சீரான் வந்த
கொச்சக வொருபோகு. பண் - கௌசிகம். தாளம் - இரண்டொத்துடைத் தடாரம்.
நால்வகை வருணப்பூதர் பாணி வந்துழிக்
காண்க. சந்திரனைப் பாடும் தேவபாணி : "குரைகடன் மதிக்கு மதலையை குறுமுய லொளிக்கு மரணினை,
இரவிரு ளகற்று நிலவினை யிறைவன் முடித்த வணியினை, கரியவன் மனத்தி னுதித்தனை கயிரவ
மலர்த்து மகிழ்நனை, பரவுநர் தமக்கு நினதிரு பதமலர் தபுக்க வினையையே" என்பது. |
1.
தொல். பொருளதி. 450.
|
|