6. கடலாடு காதை


40


பாரதி யாடிய பாரதி அரங்கத்துத்
திரிபுர மெரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவ ளொருதிற னாக வோங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்



39
உரை
43

       பாரதி ஆடிய பாரதி அரங்கத்து - பாரதியாடினமை யாற் பாரதியரங்கமெனப் பெயர்பெற்ற சுடுகாட்டிலே, திரிபுரம் எரியத் தேவர் வேண்ட - தேவர் திரிபுரத்தை எரியச் செய்ய வேண்டுதலால், எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப - வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட வளவிலே, உமையவள் ஒருதிறன் ஆக - உமையவள் ஒரு பக்கமாக, ஓங்கிய இமையவன் - தேவர் யாவரினும் உயர்ந்த இறைவன், ஆடிய கொடு கொட்டி ஆடலும் - வெற்றிக் களிப்பாற் கைகொட்டி நின்று ஆடிய கொடுகொட்டி யென்னும் ஆடலும் ;

       பாரதி - பைரவி. அவளாடுதலாற் சுடுகாடு பாரதி யரங்கம் எனப்படுவதாயிற்று. எரிய - எரிவிக்க ; அம்பு ஏவல்கேட்பப் புரம் எரிய என மாறுதலுமாம். பேரம்பு - திருமாலாகிய அம்பு ; அதற்கு முனை அங்கியங் கடவுள் என்க. ஏவல் கேட்டலாவது புரஞ்சுடுதல். அப் புரத்தில் அவுணர் வெந்துவிழுந்த வெண்பலிக் குவையாகிய பாரதி யரங்கம் என்றவாறு, உமையவள் ஒருபால் நின்று பாணி தூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த என விரித்தலுமாம். திரிபுரம் தீமடுத் தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி யாடுதலிற் கொடுமை யுடைத்தாதல் நோக்கிக் கொடுகொட்டி யெனப் பெயர் கூறப்பட்டது. கொடுங்கொட்டி யெனற்பாலது விகாரமாயிற்று.