7. கானல்வரி







25

[ 2 ]

திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
    றறிந்தேன் வாழி காவேரி.




21
உரை
28

         திங்கள் மாலை வெண்குடையான் சென்னி - மாலை யணிந்த நிறைமதி போலும் வெண் குடையை உடையவனாகிய சோழன், செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி - காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக ; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் - அங்ஙனம் வெறா தொழிந்தது, கயல் கண்ணாய் - கயலாகிய கண்ணையுடையாய், மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி - காதலை யுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன் ; வாழ்வாயாக ;

         அது, பகுதிப்பொருள் விகுதி. தன், அசை. வாழி - அசையுமாம். கங்கையைப் புணர்தலாவது வடக்கே கங்கையும் அகப்பட ஆணை செல்ல நிற்றல். புலத்தல் - ஊடுதல்; வெறுத்தல். கயற்கண் - மகளிர்க்குக் கயல்போலுங் கண் ; ஈண்டுக் கயலாகிய கண். மாதர் - காதல் ; மங்கையாகிய மாதர் என்றுமாம். ஈண்டு முன்னிலைக்கண் வந்தது ; நினது கற்பு என்றபடி. பெருங் கற்பு என்றமையால், காவேரி பிறர் நெஞ்சு புகாதவளென்பதும் பெற்றாம்; புகுதல் - ஆளக் கருதுதல். காவேரி - காவேரன் புதல்வி என்ப ;

         1"தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை
         கவேரனாங் கிருந்த கவேர வனமும்"
என்பது காண்க.


1 மணிமே, 3; 55-6.