7. கானல்வரி




95

[ 13 ]

புலவுமீன் வெள்உணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர்
அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானற்
பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே.




94
உரை
97

         புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி - புலால் நாறும் மீனின் வெளிய வற்றலைக் கவரும் பறவையை ஓட்டி, கண்டார்க்கு அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் - நோக்கினார்க்கு அலந்தலைப்பட வருத்தத்தைச் செய்யும் அணங்கோ இது காணீர், அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண்கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஒர் பெண் கொண்டதுவே - அடும்பின் மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஓர் பெண் வடிவு கொண்டதாகிய அணங்கோ இது காணீர் ;

         அலவ - அலந்தலைப்பட; மனந்தடுமாற. கண்டார்க்கு நோய் செய்யும் அணங்கோ இது வென்க. அடும்பு - நெய்தற் கருப்பொருளாய பூ ; இஃது அடம்பு எனவும் வழங்கும். பிணங்குதல் - செறிதல். நேர் - மென்மை. பெண் கொண்டது - பெண்வடிவு கொண்டது,
இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை.

         இவை நிலைவரி; அதன் இலக்கணத்தை ''முகமு முரியுந் தன்னொடு முடியும், நிலையை யுடையது நிலையெனப் படுமே'' என்னுஞ் சூத்திரத்தானறிக.