|
205
|
வளரிள வனமுலை வாங்கமைப்
பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக்
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு
செறிவளை ஆய்ச்சியர் சிலர்புறஞ் சூழ |
|
வளர்
இள வனமுலை - வளர்கின்ற இளமை பொருந்திய அழகிய முலையினையும், வாங்கு அமை பணைத்தோள்
- மூங்கிலின் அழகைக் கவரும் பெரிய தோளினையும், முளை இள வெண்பல் - இளைய நாணல் முளை
போலும் வெள்ளிய பற்களையும், முதுக்குறை நங்கையொடு - பேரறிவினையுமுடைய கண்ணகியோடு,
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமையத்து - மேல் கடலிற் சென்று சேர்ந்த ஞாயிற்றின்
ஒளி சென்று ஒடுங்கும் பொழுதில், கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப - கன்றினை நினைந்து
வரும் பசுக்களின் முழங்கும் குரல் ஒலிப்ப, மறித்தோள் நவியத்து உறிக்காவாளரொடு -
ஆட்டுக் குட்டியையும் கோடரியையும் சுமந்த தோளிலே உறியைக் காவிய இடையர்களோடு, செறிவளை
ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ - நிறைந்த வளையலை அணிந்த இடைச்சியர் சிலர் இவள் புதியளாய்
இருத்தலின் புறத்தே சூழ்ந்துவரா நிற்ப ;
வாங்கு அமை - வளைந்த மூங்கிலுமாம்.
முளை - நாணல் முளை. முதுக்குறை - பேரறிவு. செல்சுடர் - சுடர் செல் என்க. மறி நவியத்தோள்
என மாறுக. காவுதல் - தோளிற் சுமத்தல்; உறி கட்டின காவையுடைய எனலுமாம். இவள் அழகு
கண்டு புறத்தே சூழ்ந்தார் என்றலும் பொருந்தும். |
|