7. கானல்வரி





140

[ 24 ]

ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலை மயங்கினானெனக்
கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித்
தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி
நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக்
கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத்தொடங்குமன்.



138
உரை
143

         ஆங்கு - அவ்விடத்து, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங்கண் மாதவியும் - கோவலன் யாழில் வாசித்த கானல் வரிப் பாட்டுக்களைக் கேட்ட மான் போன்ற நெடிய கண்களை யுடைய மாதவியும், மன்னும் ஒர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என - (அப் பாட்டுக்கள் களவுப் புணர்ச்சியில் தலைமகன் கூறிய கூற்றாயிருத்தலின்) இவன் உள்ளத்து நிலை பெற்ற வேறோர் குறிப்புளது, இவன் தன்றன்மை வேறுபட்டான், எனப் புலந்து, கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ் வாங்கி - அப் புலவியால் அவன் கையினின்றும் யாழை வாங்குபவள் அதனைப் புலப்படுத்தாமல் கலவியால் மன மகிழ்ந்தவள்போல வாங்கி, தானும் ஒர் குறிப்பினள் போல் - தான் வேறு குறிப்பு இலளாயினும் அவன் வேறு குறிப்பினனாகப் பாடினமையின் தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்ற, கானல் வரிப் பாடற் பாணி - கானல் வரிப் பாடலாகிய உருக்களை, நிலத் தெய்வம் வியப்பு எய்த நீள்நிலத்தோர் மனம் மகிழ - அந் நிலத்திற்குரிய தெய்வமாகிய வருணன் வியப்புறவும் நெடிய புவியிலுள்ளோர் மன மகிழவும், கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டதால் பாடத் தொடங்கும் மன் - யாழின் இசையோடு கலந்து ஒன்றுபட்ட கண்டத்தினாலே பாடத் தொடங்கினாள் ;

         மன்னும் ஓர் குறிப்பு - வேறு மகளிர்பாற் சென்ற வேட்கை. தானும் ஓர் குறிப்பினள்போல் - தானும் வேறு ஆடவன்பால் விருப்பம் வைத்தாள் போல. மயங்கினானெனப் புலந்து அப் புலவியால் யாழ் வாங்கி யென்க. கலம் - யாழ் ; அதன் எழாலுக்காயிற்று. பருந்தும் அதன் நிழலும் போல யாழ்ப் பாடலும் மிடற்றுப் பாடலும் ஒன்றுபட் டியங்க என்க. மன், அசை.