7. கானல்வரி




145

[ 25 ]

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி.



144
உரை
147

         மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப - இருபக்கத்தும் வண்டுகள் மிக்கொலிக்க, மணிப் பூ ஆடை அது போர்த்து - அழகிய பூவாடையைப் போர்த்து, கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் - கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், வாழி காவேரி - காவேரி நீ வாழ்வாயாக ; கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் - அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே; அதனை அறிந்தேன் ; வாழ்வாயாக ;

மருங்கு - ஆற்றின் இருபக்கம், இருபக்கத்தும் தொங்குகின்ற கை. வண்டு - வண்டு, வளையல். பூ ஆடை - பூவாகிய ஆடை, பூத்தொழிலமைந்த ஆடை. கயற்கண் - கயலாகிய கண், கயல் போலுங் கண். காவேரியை ஒரு பெண்ணாகக் கொண்டு, அதற்கேற்பச் சிலேடை வகையாற் கூறினார். கணவன் என்றது சோழனை. வளையாமையே என்னும் தேற்றேகாரம் தொக்கது. யான் அதனை அறிந்தேன் என முடிக்க.