வாழி
அவன்றன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி - நின் கணவனது வள நாடு மகவாக நீ
அதனை வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி - ஊழி தோறும்
நடத்தும் பேருதவி நீங்காயாகலால் காவேரி நீ வாழ்வாயாக ; ஊழியுய்க்கும் பேருதவி
ஒழியாது ஒழுகல் - நீ அங்ஙனம் நீங்காது ஒழுகுதல். உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல்
வெய்யோன் அருளே வாழி காவேரி - உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவர்த்தியாகிய நடுவுநிலைமை
யுடையவனது அருளே ; வாழ்வாயாக;
முதற்கண் வாழி - அசை.
வளநாடு - சோழநாடு. மகவாக வெனத் திரிக்க. ஊழி உய்க்கும் - முறையில் நடத்தும் என்றுமாம்.
ஆழி ஆள்வான் - ஆழியை ஆள்பவன் ; ஆழியால் ஆள்பவன் என்றுமாம். ஆழி - ஆக்கினைச்
சக்கரம். பகல் - நடுவுநிலை. வெய்யோன் - விரும்புபவன்.
மூன்று பாட்டிலும் நடந்தாய்
முதலியவற்றை ஏதுவாக்காமல் முற்றாக்கி, வாழி - அசையென்றலுமாய். வளையாமை, அருளே
என்பன காரணம் காரியமான உபசார வழக்கு. இவை மூன்றும் ஆற்று வரி.
|