தீங்கதிர்
வாள் முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும் - இனிய கதிர்களையுடைய திங்கள்
போலும் ஒள்ளிய முகத்தினையுடையாளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒவ்வாவாயினும்,
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால் மகன் போல் வருதிர் ஐய - நீவிர் இந்த
முத்துக்களை வாங்குமின் என்று கூறி, ஐயனே, நாடொறும் மயங்கின மகன் போல வாரா நிற்பீர்
; வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண்முத்தம் - ஒலி மிக்க கடலானது விளங்கும் ஒளியினையுடைய
வெள்ளிய முத்துக்களைத் தந்து, விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு- மணம் பொருந்திய
கானலிடத்துப் பூமாலைகளைப் பெற்று, விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் - விற்பார்
போல் மீளா நிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ;
தீங்கதிர் - திங்கள் ; ஆகுபெயர். வாங்கும் எனச் செய்யுமென்னுஞ் சொல் முன்னிலைப்பன்மை
யேவலில் வந்தது. மால் மகன் - உன் மத்தன் ; திருமாலின் மகனாகிய காமன் என்றுமாம்.
வருதிர் ஐய - பன்மை யொருமை மயக்கம். ஓதம் முத்தம் தந்து கோதை கொண்டு, பண்டமாற்றுச்
செய்யும் விலைஞர்போல் மீளும் புகார் என்க. கோதை - வண்டல் மகளிர் களைந்திட்டன.
தலைமகன் கையுறையாக முத்துக்களை நல்கினானாக, எம் மூரின்கண் கடல்தரும் முத்துக்கள்
மிகுதியாக வுள்ளனவாதலின் இவை வேண்டாவெனத் தலைவி மறுத்தாளென்க.
இது, கையுறைமறை.
|