7. கானல்வரி






175

[ 30 ]

உண்டாரை வெல்நறா வூணொளியாப் பாக்கத்துள்
                      உறையொன் றின்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங்
                      கறிகோம் ஐய
வண்டால் திரையழிப்பக் கையான் மணல்முகந்து
                      மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும்
                      புகாரே எம்மூர்.



172
உரை
179

         உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள் - உண்டவர்களைத் தன் கடுமையால் வெல்லும் கள்ளாகிய ஊண் மறையாது வெளிப்படும் பாக்கத்திலே, உறை ஒன்று இன்றி - மருந்தொன்றின்றியே, தண்டா நோய்-அமையாத காமநோயை, மாதர்தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய - மாதரிடத்துத் தருகின்றாய் என்பதனை ஐயனே யாங்கள் எங்ஙனம் அறியா நிற்பேம் ; வண்டால் திரை அழிப்ப - தம்முடைய வண்டலாகிய சிற்றில் முதலியவற்றைக் கடலின் அலைகள் ஊர்ந்து வந்து அழிக்க, கையால் மணல் முகந்து - கையினால் மணலை வாரி யிறைத்து, மதிமேல் நீண்ட புண் தோய் வேல் நீர் மல்க - மதிபோலும் முகத்தின்மேல் நீண்ட பகைவர் புண்ணிற்றோய்ந்த வேல் போலும் கண்களில் நீர் பெருக, மாதர் கடல் தூர்க்கும் புகாரே எம்மூர் - சிறுமியர் கடலைத் தூர்க்கும் புகாரே எம்முடைய ஊராகும் ;

வெல்லுதல் - தம் வய மிழப்பித்தல். கள்ளுண்டவர் அதனை மறைப்பினும் மறையாது வெளிப்படுமென்பது 1"களித்தறியேனென்பது கைவிடுக நெஞ்சத், தொளித்ததூஉ மாங்கே மிகும்" என்பதனானறிக. இவ் வியல்பினதாய பாக்கத்துள் என்றமையால், தமது காமநோயும் மறையாது வெளிப்படுமென்பது குறிப்பித்தவாறாயிற்று. காம நோய் வெளிப்படுதல் 2"மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க், கூற்றுநீர் போல மிகும்" என் பதனானறியப்படும். பிறிதொரு மருந்தில்லா திருக்கச்செய்தே நோயைத் தந்தொழிகின்றாய் என்க. வண்டால் - நீட்டல் விகாரம். முகத்தையும் கண்களையும் உவமப் பொருளாற் கூறினார். கண்கள் வெகுளியாற் சிவந்தமையின் புண்டோய் வேல் என்றார். மணல் முகந்து தூர்க்கும் என்க. ஈண்டு மாதர் என்றது சிறுமியரை. "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக, அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேரும், தன்மை மடவார்" என்னுஞ் செய்யுளில் 'அன்னைக் குரைப்பன்' என்பதுபோல இச் செய்யுள் சிறுமியரது பேதைத் தன்மையைப் புலப்படுத்தி இன்பஞ் செய்கின்றது.

இவை யிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாரா வரைவலென்றாற்குத் தோழி கூறியவை.

இவை மூன்றும் சார்த்துவரி.


1. குறள், 93: 8. 2. குறள், 117: 1.