உழவர்
ஓதை - புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை
- நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடை நீர் ஓதை - கரைகளையும்
வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை
- புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பல்வகை யோசையும், சிறந்து
ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி - மிக்கொலிக்கச் சென்றாய் ஆதலால், காவேரி நீ
வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம்,
வாய காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி - அரணினிடத்தைக் காவாமைக்கு
ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக ;
வாய் - இடம். மழவரோதையாற்
பகைவர் அஞ்சுந் திறத்த தாகலின் இடம் காக்க வேண்டாதாயிற்று;
1"வாய்காவாது
பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள"
என்பதன் உரை நோக்குக.
அன்றி, நாவினைக் காவாது வஞ்சினங் கூறும் வீரர் என்றுமாம்; என்னை?
2"புட்பகைக்,
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"
என்றாராகலின். நடந்தவெல்லாம் வளனே என்றியையும். இவை மூன்றும் ஆற்றுவரி ; கந்தருவ
மார்க்கத்தால் இடைமடக்கி வந்தன. பின் இடைமடக்கி வருவனவும் இன்ன, வரிப் பாட்டுக்கள்
தெய்வஞ் சுட்டுவனவும், மக்களைச் சுட்டுவனவும் என இருவகைய; அவற்றுள், இவை மக்களைச்
சுட்டுவன. மற்றும், முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி யென்னும் மூன்றனுள்ளே 'திங்கண்
மாலை' முதலிய மூன்றும் முகமுடை வரி யென்றும் கூறப்படும்.
1
புறம் 22. 2
புறம் 67.
|