7. கானல்வரி




185

[ 32 ]

தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால.




184
உரை
187

         தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் றேரும் தம்முடைய அருளும் தாமும் தமது குதிரை பூட்டிய தேரும், எம்மை நினையாது விட்டாரோ - எம்மை நினையாமற் கைவிட்டாரோ, விட்டு அகல்க - அவர் அங்ஙனம் விட்டொழிக ; அம் மென் இணர அடும்புகாள் - அழகிய மென்மையாகிய கொத்துக்களை யுடைய அடும்புகளே, அன்னங்காள் - அன்னங்களே, நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேம் ஆல் - நம்மை அவர் மறந்தனராயினும் நாம் அவரை மறப்பேமல்லேம் ;

         உயர்திணையும் அஃறிணையும் விரவி உயர்திணையான் முடிந்தன ; "தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்" என்பதிற் போல. இதனைத், 1'தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப்பொருட்கு வினைகொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவதோர் முறை பற்றி வந்தது' என்பர் சேனாவரையர். முன்பு தண்ணளியுடன் எம்மை நினைந்து தேரிற் போந்து அருள் செய்தவரென்பாள், அளியும் தாமும் தேரும் எம்மை நினையாது விட்டாரோ என்றாளென்க. 'தண்ணளியும் தாமும் தேருமெனப் பின்பு சில சொல்லப் புக்கு அதனைக் காதன் மிகுதியாற் கலங்கி விட்டா ரென்றாள்' என நுட்பவுரை கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். தன்னையே யன்றித் தன்னுடன் இன்பந் துய்த்த இடத்தையும், அவ் வின்பத்தை மிகுவிப்பனவாய் அங்குள்ள அடும்பு அன்னம் முதலியவற்றையும் அவர் மறந்தமை என்னோவென்பாள், அடும்பையும் அன்னத்தையும் விளித்து உளப்படுத்தி, 'நம்மை மறந்தாரை' என்றாள். காம மிகுதியாலாய மிக்க வருத்தத்தால் இங்ஙனம் கேளாதவற்றையும் கேட்பன
போலக் கருதிக் கூறினாளென்க ; "ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, அவையல பிறவும் நுதலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவும், சொல்லியாங்கமையு மென்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். பின் இவ்வாறு வருவனவற்றிற்கும் இது விதியாகும். மறக்கமாட்டேம் என்றது ஒரு சொல். விட்டாரோ, ஓ - ஒழியிசை. ஆல், அசை.


1 இறைய, 30--உரை.