7. கானல்வரி






195

[ 34 ]

புள்ளியன்மான் தேர்ஆழி போன வழியெல்லாந்
தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றென்செய்கோ
தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றெம்மோடீங்கு
உள்ளாரோ டுள்ளாய் உணராய்மற் றென்செய்கோ.



192
உரை
195

         தபுள் இயல் மான் தேர் ஆழி போன வழி எல்லாம் - பறவையின் இயல்பையுடைய குதிரை பூட்டிய தேரின் உருளை சென்ற வழி முழுதையும், தெள்ளு நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே, சிதைத்தாய் மற்று என் செய்கோ - அழித்தாய்; யான் என்செய்வேன், தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று - அங்ஙனம் சிதைத்த நீ, எம்மொடு ஈங்கு உள்ளாரோடு உள்ளாய் - எம்மொடு இங்கிருந்து அலர் தூற்றும் அயலாரோடு உள்ளாயாதலால், உணராய் - எனது நோயினை அறியாய், மற்று என் செய்கோ - யான் என் செய்வேன் ;

         புள்ளினைப்போற் பறக்கு மியல்பினதென அதன் கடுமை கூறுவார், புள்ளியல்மான் என்றார் ; 1"புள்ளியற் கலிமா வுடைமை யான" என்றார் தொல்காப்பியனாரும். தெள்ளு நீர் - கொழிக்கின்ற நீருமாம். ஓதம் - வெள்ளமும் அலையுமாம் ; அண்மைவிளி. எம்மொடீங்குள்ளார் - எம் மனம் விட்டு நீங்காத தலைவரென்றுமாம். என் செய்கு - என் செய்வேன் ; தனித்தன்மை. மற்றும், ஓவும் அசைகள்.


1. தொல், பொருள். 164.