7. கானல்வரி



220




225

[ 39 ]

புலவுற் றிரங்கி அதுநீங்கிப் பொழிற்றண் டலையிற்
                      புகுந்துதிர்ந்த
கலவைச் செம்மல் மணங்கமழத் திரையு லாவு
                      கடற்சேர்ப்ப
பலவுற் றொருநோய் துணியாத படர்நோய் மடவாள்
                      தனியுழப்ப
அலவுற் றிரங்கி அறியாநோய் அன்னை அறியின்
                      என்செய்கோ.



220
உரை
227

         புலவுற்று இரங்கி - புலால் நாற்றம் பொருந்தி முழங்கி, அது நீங்க - அப் புலால் நீங்க, பொழியிற் றண்டலையில் புகுந்து - பொழிலாகிய சோலையிலே புகுந்து, உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழ - ஆண்டு உதிர்ந்த பலவுங் கலந்த பழம்பூக்களின் மணம் கமழ, திரை உலாவு கடற் சேர்ப்ப - அலையுலாவுகின்ற கடற் கரையை யுடையவனே, பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் - பல துன்பங்களும் உறுதலால் இன்னதொரு நோயெனத் துணியலாகாத படர் நோயை, மடவாள் தனி உழப்ப - தலைவி தானே யறிந்து அநுபவிக்க, அலவுற்று இரங்கி அறியா நோய் - மெலிதலும் இரங்கலும் புலப்படாமையின் ஒருவராலும் அறியப்படாத அந் நோயை, அன்னை அறியின் என் செய்கோ - தாய் அறிந்தால் யாது செய்வேன் ;

         புலவுற்றிரங்கி - புலத்தலுற்று வருந்தி என்ற பொருளும் தோன்ற நின்றது. நீங்க மணங் கமழப் புகுந்து உலாவு கடல் என்க. கலவை - பலவகையும் கலந்தது. செம்மல் - பழம்பூ.
இவை மூன்றும் அலர் அறிவுறீஇ வரைவு கடாவியவை.