7. கானல்வரி





230

[ 40 ]

இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே
களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட் டுளதாங்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை.



228
உரை
231

         இளை இருள் பரந்ததுவே - இளைய இருள் விரிந்தது, எல் செய்வான் மறைந்தனனே - பகலினைச் செய்யும் ஆதித்தன் மறைந்தனன், களைவு அரும் புலம்பு நீர் கண்பொழீஇ உகுத்தன - களைதற்கரிய தனிமை வருத்தத்தாலாய நீரினைக் கண்கள் மிகுதியாகச் சொரிந்தன, தளை அவிழ் மலர்க் குழலாய் - முறுக்கு விரிந்த மலரணிந்த கூந்தலையுடையாய், தணந்தார் நாட்டு உளதாங் கொல் - நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டிலும் இருக்குமோ, வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை - நம்முடைய வளை கழல நெருப்பினைச் சிந்தி வந்த இந்த மயக்கத்தையுடைய மாலைப்பொழுது ;

         இளை - இளைய ; விகாரம். ஏகாரங்கள் ஈண்டு இரங்கல் குறித்தன. புலம்பு - தனிமை ; வருத்தம். மருள் மாலை - மயங்கிய மாலை ; மயக்கத்தைச் செய்யும் மாலையுமாம். மாலை உளதாங்கொல் என வியையும். கொல் - ஐயம். தலைவர்நாட் டிருக்குமாயின் அவர் இங்ஙனம் பிரிந்திரார் என்பது குறிப்பு.