7. கானல்வரி



45




50

[ 5 ]

கரியமலர் நெடுங்கட் காரிகைமுன்
    கடற்றெய்வங் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறனிலரென்
    றேழையம்யாங் கறிகோ மைய
விரிகதிர் வெண்மதியு மீன்கணமு
    மாமென்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையு முத்துங்கண் டாம்பல்
    பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர்.



45
உரை
52

         கரிய மலர் நெடுங்கட் காரிகை முன் - கருங் குவளை மலர் போலும் நீண்ட கண்களையுடைய தலைவியின்முன், கடற்றெய்வம் காட்டி - கடலின் தெய்வமாகிய வருணனைப் பல்காலும் சுட்டிக் கூறிய, அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று - கைவிடுதற்கரிய சூளை அறனிலராய்த் தப்பினாரென்று, ஏழையம் யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாம் எவ்வண்ணம் அறிவோம்; விரிகதிர் வெண்மதியும் மீன் கணமும் ஆம் என்றே - விரிந்த கிரணங்களையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன் கூட்டமும் ஆமென்று மயங்கி, விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு - விளங்குகின்ற வெண்ணிறமுடைய சுரிந்த சங்கினையும் முத்தினையும் கண்டு, ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் - ஆம்பற்போது மலரா நிற்கும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;

        அடுக்கு - பன்மை குறித்தது. கூறி யென ஒருசொல் வருவிக்க. நின்னை வரைந்துகொண்டு இல்லறம் புரிவேம் எனக்கூறித் தெய்வஞ் சான்றாகச் சூளுரைத்தவர் என்க. சூள் - சபதம். அறனில்லாத தலைவர் பொய்த்தாரென்றுமாம். நீர் பொய்த்தீர் என்பதனை அறனிலர் பொய்த்தார் எனக் கூறினமையின் முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏழையமாதலின் எங்ஙனம் அறிவோமென்றாள். ஏழையம் - மாதரேம் ; அறிவில்லேம். தோழி தலைவியையும் உளப்படுத்தி ஏழையம் என்றாள். அறிவிலேமாகிய யாம் பெரியீராகிய நும்மை அங்ஙனம் கூறுதல் தகாதென்பாள்போலத் தலைவனிழுக்கினை யெடுத்துக் காட்டிய திறம் நயப்பாடுடையது. ஐய, அண்மை விளி. இங்ஙனம் பன்மையும் ஒருமையும் விரவி வருதல் புலனெறி வழக்கிற் பலவிடத்தும் காணப்படும். பொதி யவிழ்த்தல் - மலர்தல். ஆம்பல் வளையும் முத்தும் கண்டு மதியும் மீன் கணமுமாமென்று மலரும் என்றியைக்க; நிரனிறை. புரி - இடமாகவும் வலமாகவும் வளைந்திருப்பது. நெய்தலின் வளமிகுதி கூறியபடி.