7. கானல்வரி

 

[ 42 ]

பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல்
மறவையாய் என்னுயிர்மேல் வந்தஇம் மருள்மாலை.



236
உரை
239

         பறவை பாட்டு அடங்கினவே - பறவைகள் ஒலித்தலடங்கின, பகல் செய்வான் மறைந்தனனே - சூரியன் மறைந்தான், நிறை நிலா நோய் கூர நெடுங்கண் நீர் உகுத்தன - நிறுத்த நில்லாவாய் நோய்கள் மிகாநிற்க நெடிய கண்கள் நீரைச் சொரிந்தன, துறுமலர் அவிழ் குழலாய் - அவிழ்ந்த மலர்கள் நெருங்கிய கூந்தலையுடையாய், துறந்தார் நாட்டு உளதாங்கொல் - நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் உண்டாகா நிற்குமோ, மறவையாய் என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை - மறத்தினையுடையதாய் என் உயிரின்மேல் வந்த இந்த மயங்கிய மாலைப் பொழுது ;

         பாட்டு - பாடுதல்; ஒலித்தல். நிறை - நிறுத்தல். நிலா - நில்லா வாய்; எச்சமுற்று. துறு - நெருங்கிய. மறவை - மறத்தை யுடையது. உயிர்மேற் பாய்ந்து வந்த மாலையாகிய புலியென்க.

         இவை மூன்றும் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குரைத்தன.

         இவை ஆறும் மயங்கு திணை நிலைவரி. இவற்றுள் திணை மயங்கியுள்ளமை காண்க.