7. கானல்வரி



260

[ 48 ]

நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை
இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை.



260
உரை
263

         நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை - நுளையரது விளரிப் பாலையாகிய பண்ணினைப் பாடுங்கால், இளி கிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை-மாலைப் பொழுதே, இளி யென்னும் நரம்பு கைக்கிளை யென்னும் நரம்பிற் சென்று மயங்க வந்து தங்கினாய், இளி கிளையிற் கொள்ள இறுத்தாய் மன் நீயேல் - அங்ஙனம் தங்கினாய் நீ யாயின், கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை - கொள்ளுதலில் வல்லாயாகிய மாலையே நீ என் உயிரைக் கொள்வாயாக ;

         விளரிப்பாலை - இரங்கற்பண் ; நெய்தற்குரியதாகலின் நுளையர் விளரி யென்றார். நொடிதருதல் - சொல்லுதல். நின்ற நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை ; அது கூடம் என்னுங் குற்றம் ; இளி முதலாகக் கைக்கிளை ஆறாவதாகலின் இளிக்குக் கைக்கிளை பகை. மயக்கத்தாலே பகை நரம்பிலே கை சென்று தடவவென்க. கொளை வல்லாய் - உயிரைக் கொள்ளுதலை வல்லாய். வாழியென்றது குறிப்பு.