7. கானல்வரி





270

[ 50 ]

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ யாயின் மணந்தார் அவராயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.



268
உரை
271

        பையுள் நோய் கூர - துன்பமாகிய நோய் மிக, பகல் செய்வான் போய் வீழ - ஆதித்தன் மேல்கடலிற் சென்று வீழ, வையமோ கண் புதைப்ப - வையத்துள்ளார் கண்ணினை மூட, வந்தாய் மருள் மாலை - மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலை நீ ஆயின் - மாலைப் பொழுது நீயேயாயின், மணந்தார் அவர் ஆயின் - முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை - மாலையே இவ்வுலகந்தான் மிடியுற்றது, வாழ்வாயாக ;

        வையம் - வையத்துள்ளார் ; ஆகுபெயர். நீயாயின் என்றதும் அவராயின் என்றதும் கொடுமை குறித்தென்க. ஓகாரங்கள் சிறப்பு. நல்கூர்தல் - ஈண்டுத் துன்புறுதல். ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கு முளதெனத் தனக்குத் தோற்றுதலால் ; "தான் சாவ உலகு கவிழும்" என்னும் பழமொழியுங் காண்க. வாழி - குறிப்பு.