7. கானல்வரி





55

[ 6 ]

காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய
மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப்
போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர்.



53
உரை
56

         காதலர்ஆகிக் கழிக்கானற் கையுறை கொண்டு எம் பின் வந்தார் - காதலை யுடையராகிக் கடற்கரைச் சோலையிடத்தே அன்று கையுறைகொண்டு எமது பின்னே வந்தவர், ஏதிலர் தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை - இன்று தாம் நொதுமலராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார் ; அங்ஙனம் நிற்றலை, யாங்கு அறிகோம் ஐய - ஐயனே ஏழையேமாகிய யாம் எங்ஙனம் அறிவோம்; மாதரார் கண்ணும் - மகளிருடைய முகத்திலுள்ள கண்ணையும், மதிநிழல் நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் - நீரிலே தோன்றும் மதியினது சாயலில் இணையாக மலர்ந்த நீல மலரையும், அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் - அறியமாட்டாது வண்டுகள் ஊசலாடும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;

கையுறை - காணிக்கை. பின்பு யாம் இரப்ப என்பதனால் முன்பு தாம் இரந்தவர் என்று கொள்க. நிற்கின்றார் ; அங்ஙனம் நிற்றலை என அறுத்துரைக்க. அன்று காதலராகிக் கையுறை கொண்டு எமது பின்னே தொடர்ந்து வந்து இரந்தவர் இன்று யாம் இரக்கும் வண்ணம் ஏதிலராகி நிற்கின்றார் ; இஃதென்னே! என்ற படி. ஈண்டும் முன்னிலைப் படர்க்கை. ஏழையம் என்பதனை ஈண்டும் கூட்டுக. மதிநிழல் என்றதற்கேற்ப முகம் என்பது வருவிக்கப் பட்டது. தேன் உண்ண வந்த வண்டு இது நீலமலர், இது கண் என அறியமாட்டாது மயங்கித் திரியும் என்றார். ஊசலாடுதல் - அங்கு மிங்கும் அலைதல்; இலக்கணைப் பொருள்.