மோது
முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல்வாய்ச் சங்கம் - மோதுகின்ற பெரிய
அலையாலே தாக்குண்டு அசைந்து போந்த ஒலிக்கின்ற வாயையுடைய சங்கம், மாதர் வரிமணல்
மேல் வண்டல் உழுது அழிப்ப - சிறுமியர் மணலின்மீது இயற்றிய சிற்றில் முதலியவற்றை
உழுது அழித்தலால், மாழ்கி ஐய - ஐயனே அவர்கள் மயங்கி, கோதை பரிந்து - தாம் அணிந்திருந்த
மாலையை அறுத்து, அசைய மெல்விரலாற் கொண்டு ஓச்சும் குவளை - அசைந்து செல்லும்படி மெல்லிய
விரல்களால் வீசி யெறிந்ததிற் சிதறிய நீலமலர்கள், மாலைப்போது சிறங்கணிப்ப
- மாலைப் பொழுதிலே கடைக் கணித்தாற்போற் கிடப்ப, போவார் கண் போகாப் புகாரே
எம் ஊர் - ஆண்டுச் செல்வோர் கண்கள் அவற்றைக் கண்களென ஐயுற்று அப்பாற் செல்லாத
காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
அசைந்து போந்தவென
மாறுக, முரல் வாய் - ஒலிக்கும் வாய். மாதர் - ஈண்டுச் சிறுமியர். வரி - கீற்று.
வண்டல் - மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகுபெயரால் சிற்றில் முதலியவற்றைக் குறித்தது.
உழுதல் - கீழ்ந்து செல்லுதல். சிந்திய குவளை மலர்கள் மாலைப்பொழுதில் சிறிதே குவிந்து
மகளிர் கடைக்கணித்தாற்போன் றிருந்தமையின், சிறங்கணிப்ப என்றார். சிறங்கணித்தல்
- கடைக்கணித்தல். இவை இங்கு வாழ்வாரைக் கடைக்கணித்த கண்களென்று தம் பேதைமையாற்
பார்த்து நிற்கும் எனக்கொண்டு, ஆகலின் யாங்களும் பேதையம் எனக் குறிப்பெச்சமாக்கி
உரைத்தலுமாம். இனி, கோதையைக் கூந்தலெனக் கொண்டு, கூந்தல் அவிழ்ந்தசைய விரலால்
ஓச்சும் குவளை மாலையினின்றும் சிதறிய பூக்கள் என்றுரைத்தலுமாம்.
'கரியமலர்'' முதலிய
மூன்றும் தோழி தலைமகன் முன்னின்று வரைவு கடாயவை. கையுறைமறை எனினும் அமையுமென்றார்
அரும்பதவுரை யாசிரியர். இதற்கு, நீர் கொண்டு வந்த பூக்கள் எம் மூரின் கண்ணும் உளவாகலின்
அவை வேண்டா என மறுத்தவாறாம் என்பது கருத்தாகும். ஆயின், "கையுறை கொண்டெம் பின்
வந்தார்" என்பது, இன்று அவ்வாறு வந்திலரெனப் பொருள் தருதலின் அதனோடு மாறுபடுவதாகும்.
இவை பாட்டுடைத் தலைவன் பதியொடு சார்த்திப் பாடிய வரிப்பாட்டாதலின் சார்த்துவரி
யாகும். பாட்டுடைத் தலைவன் - சோழன் ; பதி - புகார். "பாட்டுடைத் தலைவன் பதியொடும்
பெயரொடும், சார்த்திப் பாடலிற் சார்த்தெனப் படுமே" என்றார். அது முகச்சார்த்து,
முரிச்சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைப்படும்; அவற்றுள் இம் மூன்றும் முகச்சார்த்து.
(இம் மூன்றும் ''மோது முதுதிரை,'' காதலராகி,'' "கரியமலர்" என்ற முறையிலும் காணப்படுகின்றன.)
|