7. கானல்வரி



65




70

[ 8 ]

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.




65
உரை
71

         துறைமேய் வலம்புரி - கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள், தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய் வான் - மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி, பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து - அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து, நுண் தாது போர்க்கும் கானல் - அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே, நிறைமதி வாண்முகத்து நேர் கயற் கண் செய்த - இவளது நிறைமதி போலும் ஒள்ளிய முகத்திலுள்ள கயலை யொத்த கண்கள் செய்த, உறை மலி உய்யா நோய் - மருந்தாற் போக்க முடியாத நிறைந்த நோயினை, ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் - சுணங்கு பரந்த மெல்லிய முலைகளே போக்கும் போலும்;

         மாய்வான் - மறைய; வினையெச்சம், மாய்வான் தாது போர்க்குங் கானல் என்றியையும். கயல் நேர் கண், சுணங்கு ஊர் முலை, உறை உய்யா மலி நோய் என மாறுக. உறை - மருந்து. உய்யா - போக்க முடியாத. மலி உறை என்னலுமாம். போலும் - ஒப்பில் போலி.
இது, குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதன் மிகுதி குறிப்பினானறிந்து கூறியது.