பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1011 

யும் - வெள்ளமாகிய நீரையுடைய வயலின்கண் அன்னமும் நாரையும்; காய்த்த செந்நெலின் தாழ்கதிர் நெற்றிமேல் - விளைந்த நெல்லின் தாழ்ந்த கதிரின் நெற்றியிலே; பூத்த முல்லையின் போது பொழிந்து உக இரிந்த - மலர்ந்த முல்லை மலர்கள் தேனைச் சொரிந்து சிந்தும்படி ஓடின.

   (வி - ம்.) இது முல்லையும் மருதமும் மயங்கின நிலமயக்கம்.

( 221 )
1778 அளகு சேவலொ டாடியங் காய்க்குலை
மிளகு வார்கொடி யூசல் விருப்புறூஉஞ்
சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சர
மிளகு காடிள கப்பரி கொண்டவே.

   (இ - ள்.) அளகு சேவலொடு ஆடி - கூகைப் பெடை தன் சேவலுடன் புணர்ந்து; அம் காய்க்குலை வார் மிளகு கொடி ஊசல் விருப்பு உறூஉம் - அழகுறக் காய்த்த குலையையுடைய நீண்ட மிளகுக் கொடியாகிய ஊசலை விரும்புகின்ற; சுளகு வார் செவித்தூங்கு கைக் குஞ்சரம் இளகுகாடு - சுளகுபோலப் பெரிய காதுகளையும் தூங்குங் கையையுமுடைய யானைகளை யுடைய தழைத்த காடு; இளகப் பரி கொண்ட - அசையும்படி இவர்களுடைய படைகள் சென்றன.

   (வி - ம்.) ஊசலை விரும்புகின்ற காடு, யானைகளையுடைய தழைத்த காடு எனக் கூட்டுக. இளகு காடு - தழைத்த காடு 'காடு அசையும்படி யானை அவ்வோசைகளைக் கேட்டுச் செலவு கொண்டன' என்றுங் கூறலா மென்பர் நச்சினார்க்கினியர். அளகு - காட்டுக் கோழியுமாம்; 'கோழி கூகை ஆயிரண்டல்லவை - சூழுங்காலை அளகெனல் அமையா' (தொல். மரபு. 55)

( 222 )
1779 மருவி மாதவர் பள்ளியுள் விட்டதே
அருவிக் குன்றமு மைவனச் சாரலுங்
குருவி யார்த்தெழு கொய்புனக் கானமுந்
திருவிற் றீர்ந்தவர் தேயமுந் தோ்ந்துபோய்.

   (இ - ள்.) அருவிக் குன்றமும் - அருவிகளையுடைய மலைகளையும்; ஐவனச் சாரலும் - மலை நெல்லைக் கொண்ட மலைப் பக்கங்களையும்; குருவி ஆர்த்து எழு கொய்புனக் கானமும் - குருவிகள் ஆரவாரித் தெழுகின்ற தினைகொய் புனத்தையுடைய காட்டையும்; திருவில் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்துபோய் - செல்வமில்லாத வறியர் வாழும் நாடுகளையும் சீவகன் உளனோ என்று ஆராய்ந்து சென்று; மாதவர் பள்ளியுள் மருவிவிட்டதே - தாபதர் வாழும் பள்ளியிலே பொருந்தித் தங்கியது இவர்களுடைய படை.