பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1012 

   (வி - ம்.) ஐவனம் - மலைநெல். கொய்புனம் : வினைத்தொகை. திரு - செல்வம், தேயம் - நாடு, தேர்ந்து - ஆராய்ந்து. விட்டது - தங்கியது.

( 223 )

வேறு

1780 வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி
விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக்
கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன்
றுண்டுபொழி லிமையவர்க ளுலகமுறு வதுவே.

   (இ - ள்.) வண்டு துயில் கொண்டு - வண்டுகள் உறங்கி; குயில் ஆலி - குயில்கள் கூவி; மயில் அகவி - மயில்கள் கூவுமாறு; விண்டு மதுவிட்டு விரிபோது பல பொதுளி - அலர்ந்து தேனைச் சொரிந்து மலரும் மலர்கள் பல தழைத்து; தளிர் கொண்டு வேய்ந்து - தளிரைக் கொண்டு வேய்ந்து; சினை தாழ்ந்து - கிளைகள் தாழ்ந்து; நனை ஆர்ந்து - அரும்புகள் நிறைந்து; இமையவர்கள் உலகம் உறுவது - வானவர்களின் உலகைப் போன்றதாகிய; பொழில் ஒன்று உண்டு - சோலை ஒன்று ஆண்டு உளது.

   (வி - ம்.) துயில் கொள்ளப்பட்டு ஆலப்பட்டு அகவப்பட்டு பொதுளப்பட்டு வேயப்பட்டு; தாழ்ந்து ஆர்ந்து ஒரு பொழில் உண்டு என்க. உறுவது - ஒப்பது.

( 224 )
1781 காவிகழு நீர்குவளை யாம்பல்கடிக் கமலந்
தூவிமட நாரைதுணை யன்னம்பயின் முதுமீன்
மேவியுறை வண்டினொடு மல்கிவிழை தகைய
வாவியொடு காவினிடை மாந்தர்பதி கொண்டார்.

   (இ - ள்.) காவி கழுநீர் குவளை ஆம்பல் கடிக்கமலம் - நீலோற்பலமும் கழுநீரும் குவளையும் ஆம்பலும் மணமுறு தாமரையும் ஆகிய மலர்களும்; தூவி மடநாரை துணை அன்னம் பயில்முதுமீன் மேவி உறை வண்டினொடு - தூவியையுடைய இளநாரையும், துணையையுடைய அன்னமும், பயில்கின்ற மீனும், விரும்பி வாழும் வண்டுகளும்; மல்கி - நிறைந்து; விழைதகைய - விரும்புந் தகைமையையுடைய; வாவியொடு - குளத்துடன் கூடிய; காவினிடை மாந்தர் பதிகொண்டார் - சோலையிலே நால்வரும் படை வீரருடன் தங்கினர்.

   (வி - ம்.) காவி - நீலோற்பல மலர். கடிக்கமலம் - மணமுடைய தாமரை மலர். தூவி - சிறகு. பயின்முதுமீன் - பயில்கின்ற முதுமையாகிய மீன் என விவரிக்க. வினைத்தொகை பின்னது பண்புத்தொகை. மல்கி - நிறைந்து. தகைய - தன்மையையுடைய. பதிகொள்ளுதல் - தங்குதல்.

( 225 )