பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1014 

   (இ - ள்.) மாசொடு மிடைந்து - அழுக்குடன் கலந்து; மணிநூற்ற அனைய - நீலமணியைக் கம்பியாக்கினால் ஒத்த ; ஐம்பால் பூசுதலும் இன்றிப் பிணிகொண்டு புறம்தாழ - மயிர் கழுவுதலும் இல்லாமல் சடையாகிப் புறத்திலே தாழ; மறைந்த வழி - மறைவான இடத்திலமர்ந்து; வாசமலர் வாமன் அடிக்கு ஏற்றி - மணமுறும் மலர்களை அருகன் திருவடியிலே ஏற்றி; தோசம் அறத் துதிகள் மனத்து ஓதி - குற்றமற வாழ்த்துக்களை மனத்திலே ஓதி; தொழுது இருந்தாள் - வணங்கியிருந்தாள்.

   (வி - ம்.) கருத்து சீவகன் வாழ்வே கருதுதலின் மறைந்த வழியில் இருந்தாள்.

   மணி - நீலமணி, ஐம்பால் - கூந்தல். பூசுதல் - கழுவுதல், புறம் - முதுகு. மறைந்தவழி வாசமலர் வாமனடிக்கேற்றி என மாறுக. வாமன் - அருகக்கடவுள். தோசம் - குற்றம்.

( 228 )
1785 சிந்திப்பலென் சிறுவன்றிற மினியென்றெழி னெடுங்கண்
வந்துபனி வார்ந்துமுலைக் கலிங்கமது நனைப்ப
வந்திலிருந் தாளவளுக் கடைந்துமன நடுங்கி
வந்தித்திருந் தார்மகிழ்ந்து காதன்மிக மாதோ.

   (இ - ள்.) இனி என் சிறுவன் திறம் சிந்திப்பல் என்று - இப்போது என் மகன் நிலையைச் சிறிது நினைத்துப் பார்ப்பேன் என்று எண்ணி; எழில் நெடுங்கண் பனி வந்து வார்ந்து - அழகிய நீண்ட கண்களிலிருந்து நீர்த்துளி வந்து வீழ்ந்து; முலைக் கலிங்கத்து நனைப்ப - முலையிற் கலிங்கமாகிய அதனை நனைக்க; அந்தில் இருந்தாள் - அங்கே இருந்தாள்; அவளுக்குக் காதல் மிக - அவளுக்கு நம் பிள்ளைகள் என்று ஒரு காதல் மிகும்படி; மனம் நடுங்கி வந்தித்து அடைந்து மகிழ்ந்திருந்தார் - அவர்கள் அஞ்சிய உள்ளத்துடன் வணங்கிச் சேர்ந்து மகிழ்ந்திருந்தனர்.

   (வி - ம்.) இவர்களைக் கண்டு அழுகை மாற்றினாள்.

   சிந்திப்பல் : தன்மை ஒருமை வினைமுற்று. சிறுவன் - பிள்ளை; சீவகன். முல்லைக்கலிங்கம் - முலையின் மேற்றுகில். அந்தில் - அவ்விடத்தே. அவளுக்குக் காதன்மிக அடைந்து என இயைக்க. அவள் : விசயை.

( 229 )
1786 வரையுடுத்த பள்ளியிட மாகவதின் மேயோள்
விரையுடுத்த போதுறையும் வேனெடுங்க ணாள்கொ
லுரையுடுத்த நாவுறையு மொண்ணுதல்கொ லன்றித்
திரையுடுத்த தேமொழிகொ லென்றுதெரி கல்லார்.

   (இ - ள்.) வரை உடுத்த பள்ளி இடம் ஆக அதின் மேயோள் - மலைகள் சூழ்ந்த அப் பள்ளியே இடமாக அதனுள்