பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1033 

   (வி - ம்.) எயில் : ஏமமாபுரமதில்.

   அலங்கலையுடைய மாலை என்க. செவ்வெயில் - சிவந்த நிறமுடைய மதில். இதற்குப் புதுக்கலத்தின் வாய்விளிம்பு உவமை. அம்மதிலக்கத்து உயர்ந்து தோன்றும் வெண்மாடங்களுக்குப் புதுக்கலத்தின் அகத்தே உண்டான பாற்பொங்கலின் நுரைகள் உவமை.

( 265 )

வேறு

1822 மானயா நோக்கியர் மருங்குல் போல்வதோர்
கானயாற் றடைகரைக் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணற்
றானையா நால்வருந் தணப்பின் றெய்தினார்.

   (இ - ள்.) மான் அயாம் நோக்கியர் மருங்குல் போல்வது - மான் வருந்தும் கண்ணியரின் இடை போன்று நுடக்கமும் அழகும் உடையதாகிய; ஓர் கான யாற்று அடைகரை - ஒரு காட்டாற்றின் நீரடை கரையிலே; கதிர்கண் போழ்கலாத்தேன் அயாம் பூம்பொழில் - கதிரவனுடைய கதிர்களாலும் ஊடுருவிச் செல்ல முடியாத, தேனினம் நீங்கமாட்டாது வருந்தும் மலர்க் காவிலே; திண்ணை வெண்மணல் - மேடையாக உயர்ந்த வெண்மணலிலே; தானை ஆம் நால்வரும் - படை உண்டாதற்குக் காரணமான நால்வரும்; தணப்பு இன்றி எய்தினார் - பிரிவின்றிச் சென்றமர்ந்தனர்.

   (வி - ம்.) கானா யாறு : அ : அசை. கண் - இடம்.

   மான் அயாவுதற்குக் காரணமான நோக்கென்க. அயாவுதல் - வருந்துதல். அடைகரை - நீரடைகரை. கதிர்- ஞாயிற்றின் கதிர் போழ்கலாப் பொழில், தேனயாம் பொழில், என ஒட்டுக, தானை ஆம் என்புழி ஆம் அசையெனினுமாம்.

( 266 )
1823 வார்ந்துதேன் றுளித்துமட் டுயிர்த்து வார்மண
லார்ந்துபோ தருந்துவி சடுத்த தொத்துமேற்
றூர்ந்துதேன் வண்டொடு துதைந்துள் புக்கவர்
போந்துபோக் கரியதப் பொழிலின் பெற்றியே.

   (இ - ள்.) அப்பொழிலின் பெற்றி - அம் மலர்க்காவின் இயல்; தேன் வார்ந்து துளித்து மட்டு உயிர்த்து-ஈக்கள் வைத்த தேன் பெருகித் துளித்து மலரின் மது ஒழுகி; வார் மணல் போது ஆர்ந்து - நிறைந்த மணலிலே மலர்கள் பொருந்தி; தவிசு அடுத்தது ஒத்து - தவிசு பொருந்தியதைப் போன்று : மேல் தூர்ந்து - மேலிடம் வெளியடங்கி; தேன் வண்டொடு துதைந்து - தேனும் வண்டும் நெருங்கி; உன் புக்கவர் போந்து