பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1060 

அம்பு - கணையும்; மணி - மணியும்; அயில் - வேலும்; வாள் - வாளும்; எலியின் மயிர்ப் போர்வையொடு - எழிமயிர்ப் போர்வையுடன்; எம் மன்னன் விடுத்தான் - கலுழவேகன் வரவிட்டான்.

   (வி - ம்.) மதுத்தண்டு - வீரபானம் இருக்குங் குழாய், உம்மையும் இரண்டனுருபும் விரிக்க.

( 318 )
1875 வந்தவனை யாருமறி யாமன்மறை யாகத்
தந்துதரன் கேட்பவிது சாமிவலித் தானா
வைந்துமதி யெல்லையினை யாண்டுடைய னாகி
யந்திலகன் றான்றமரொ டாங்கணெனச் சொன்னேன்.

   (இ - ள்.) வந்தவனை யாரும் அறியாமல் மறையாகத் தந்து - வந்தவனாகிய தானை ஒருவரும் அறியாமல் மறைவாகக் கொண்டு வந்து வைத்து; தரன் கேட்ப - அவன் கேட்கும்படி; ஐந்துமதி எல்லையினை ஆண்டு உடையனாகி - ஓர் ஆண்டிற்கு ஐந்து திங்களளவு குறையாக உடையனாகி; தமரோடு ஆங்கண் அகன்றான் - உறவினரோடே ஏமமாபுரத்தே அகன்றான்; எனச் சாமி வலித்தான் ஆ சொன்னேன் - என்று இதனைச் சாமி தானே அருளிச் செய்தானாகக் கூறினேன்.

   (வி - ம்.) 'தோழர் ஏமமாபுரத்திற்கு ஏறப் போவதற்கு முன்பே ஏழு திங்கள் சென்றமை, 'இங்கிவர்கள் இவ்வாறு' (சீவக. 492) என்னுஞ் செய்யுளிற் கூறனாம். பின்பு, தோழர் தாபதப் பள்ளியிற் செல்ல ஒன்றும், ஒருமதி எல்லை நாளுட் ... கொணர்ந்த பின்றை' (சீவக. 1817) எனவே சீவகன் வந்து விசயையைக் காண ஒன்றும், இவனைக் கண்டு ஊரேறப் போக ஒன்றும், மாமனாரிடத்துச் செல்ல ஒன்றும், மீண்டு ஊர் செல்ல ஒன்றும் ஆக ஐந்து திங்களும் சென்றவாறுணர்க' என்று கால விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர்.

( 319 )
1876 பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித்
தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லிப்
பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்
விட்டலர்ந்த கோதையல ரால்விளைவ துண்டோ.

   (இ - ள்.) பட்டபழி வெள்ளிமலை மேல் பரத்தல் அஞ்சி - கட்டியங்காரன் சிறைசெய்தான் என்று பிறந்தபழி வெள்ளி மலைமேற் பரவுதலை அஞ்சி; பிற தூது சொல்லி - வேறே சிலவற்றைக்கூறி; அவனைத் தொட்டு விடுத்தேன் - அவனை என்னைத் தொட்டுச் சூளுறவு கொண்டு போகவிட்டேன்; பட்ட பழி காத்துப் புகழே பரப்பின் அல்லால் - இனி இப் பழியை மறைத்து அரசவுரிமை எய்திப் புகழைப் பரப்புதல் அல்லது; விட்டலர்ந்த கோதையவரால் விளைவது உண்டோ - முறுக்குவிட்டு மலர்ந்த