பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1073 

கொள்ளுதல் வேண்டா; உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமொடு ஆய்க என்றான் - உண்ணும் நீரையும் உணவையுந் தீங்கு வாராமற் காத்தற்குக் கருங்குரங்கிற் கிட்டு ஆராய்க என்றான்.

   (வி - ம்.) அன்னத்தின் கண்ணிலும் சக்கரவாகத்தின் முகத்திலும் என முறையே கொள்க. அன்னத்தின்கண் குருதி காலும்; சக்கரவாகம் முகம் கடுக்கும்; கருங்குரங்கு உண்ணாது.

( 5 )
1894 அஞ்சனக் கோலி னாற்றா
  நாகமோ ரருவிக் குன்றிற்
குஞ்சாம் புலம்பி வீழக்
  கூர்நுதி யெயிற்றிற் கொல்லும்
பஞ்சியின் மெல்லி தேனும்
  பகைசிறி தென்ன வேண்டா
வஞ்சித்தற் காத்தல் வேண்டு
  மரும்பொரு ளாக வென்றான்.

   (இ - ள்.) அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் - அஞ்சனக் கோலால் அடித்தற்குப் பற்றாத நாகப்பாம்பு; அருவிக் குன்றின் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றின் கொல்லும் - அருவியை யுடைய குன்றைப் போன்ற மதயானை புலம்பி வீழும் படி எயிற்றாற் கடித்துக் கொல்லும்; பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா - பஞ்சியினும் மெல்லியதா யினும் பகையைச் சிறிது என்று கருதவேண்டா; அரும் பொருளாக அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்றான் - அதனை அரும்பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்க வேண்டும் என்றான்.

   (வி - ம்.) பகைவரின் சிறுமைக்கு அஞ்சனக் கோலினாற்றா நாகம் உவமை. அஞ்சனக்கோல் கண்ணுக்கு மைதீட்டுஞ் சிறுகோல். அருவிக் குன்றின்பால் வாழும் குஞ்சரம் எனல் நன்று. சிறு பகையையும் பெரும் பகைபோல மதித்து அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்பதாம்.

( 6 )
1895 பொருந்தலாற் பல்லி போன்றும்
  போற்றலாற் றாய ரொத்து
மருந்தவர் போன்று காத்து
  மடங்கலா லாமை போன்றுந்
திருந்துவேற் றெவ்வர் போலத்
  தீதற வெறிந்து மின்ப
மருந்தினான் மனைவி யொத்து
  மதலையைக் காமி னென்றான்.