பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1129 

   (வி - ம்.) இதுவும் பழிநாணுதல் கருதி வந்ததாகலின் நீர் வியத்தல் வேண்டா என்று புத்திசேனன் கூறினான்.

( 4 )

வேறு

1999 மதுக்குடம் விரிந்தன மாலை யாரொடும்
புதுக்கடி பொருந்துதி புக்க வூரெலாம்
விதிக்கிடை காணலாம் வீதி மாநகர்
மதிக்கிடை முகத்தியோர் மடந்தை யீண்டையாள்.

   (இ - ள்.) புக்க ஊரெலாம் - நீ சென்ற ஊர்தொறும் - மதுக்குடம் விரிந்த அன மாலையாரொடும் புதுக்கடி பொருந்துதி - தேன் குடம் விரிந்தாற் போன்ற மாலையாராகிய மங்கையருடன் புதுமணம் பொருந்துகின்றனை; விதிக் கிடை காணலாம் வீதிமாநகர் - சிற்பநூலின் இயலுக்கு ஒப்புக்காணலாகும் தெருக்களையுடைய இப் பெருநகரிலே; மதிக்கிடை முகத்தி ஓர் மடந்தை ஈண்டையாள் - திங்களுக்கு ஒப்பான முகமுடையாள் ஒரு மங்கை இங்குள்ளாள்.

   (வி - ம்.) 'ஈண்டையாள்' என்றான் நீ மணஞ் செய்து கொண்ட இந்நகரிலேயே என்றற்கு. 'நகர் - வீடு' எனக் கொண்டு தெருக்களையும் வீடுகளையுமுடைய 'ஈண்டு' என்று கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஈண்டு - இந்நகர்.

( 5 )
2000 ஆடவர் தனதிடத் தருகு போகினு
நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்
வீடுவ லுயிரென வெகுளு மற்றவள்
சேடியர் வழிபடச் செல்லுஞ் செல்வியே.

   (இ - ள்.) சேடியர் வழிபடச் செல்லும் செல்வி அவள் - பணிப்பெண்கள் வழிபாடு செய்ய வாழும் செல்வியாகிய அவள்; ஆடவர் தனது இடத்து அருகு போகினும் - ஆடவர்கள் தாம் வாழும் இல்லத்தின் அருகிலே சென்றாலும்; அவர் பெயர் நாடி நயந்து கேட்பினும் - தன்னருகிலிருப்போர் ஆடவர் பெயரை நாடி விரும்பிக் கூறக் கேட்டாலும்; உயிர் வீடுவல் என வெகுளும் - உயிர் விடுவேன் என்று சீறுவாள்.

   (வி - ம்.) மற்று : அசை.

   தனதிடம் - தான் வாழும் இல்லம். அருகு - பக்கம், அவர் பெயர் நாடி நயந்து கேட்பினும் என மாறுக. உயிர்வீடுவல் என மாறுக. வீடுவல் : தன்மையொருமை வினைமுற்று. இதற்கு நான் என்னும் எழுவாய் வருவிக்க. வெகுளும் - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. இங்குப் பெண்பாற் படர்க்கையில் வந்தது. இதற்கு அவள் என்ற எழுவாயைக் கூட்டுக. போகினும் கேட்பினும் உயிர் வீடுவல் எனவே காணின் உயிர் விடுதல் கூறவேண்டாதாயிற்று.

( 6 )