பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1160 

   (இ - ள்.) மட்டு அவிழ் கோதை! - தேன் மலருங் கோதையாய்!; மனம்மகிழ் காதலானைப் பெற்றாய் - நின் மனத்திலே மகிழ்ந்த காதலானை அடைந்தாய்; இட்டிடைநோவ நில்லாது எழுக என - இனி, சிற்றிடை வருந்த நில்லாமற் செல்க என்று; ஏந்தல் தோழன் பட்டிமை உரைத்தது ஓராள் - சீவகன் தோழன் வஞ்சனையாகக் கூறியதை அறியாளாய்; பரவிய தெய்வந்தான் வாய்விட்டு உரைத்திட்டது என்றே - தான் வாழ்த்திய தெய்வமே வாய்விட்டுக் கூறியது என்றே; வேற்கணாள் பரவி மீண்டாள் - வேலனைய கண்ணாள் மீட்டும் வாழ்த்தித் திரும்பினாள்.

   (வி - ம்.) கோதை : விளி. இட்டிடை - சிற்றிடை. தோழன் - ஈண்டுப் புத்திசேனன். பட்டிமை - வஞ்சனை. பரவப்பட்ட தெய்வம் என்க. வேற்கணாள் : சுரமஞ்சரி.

( 64 )
2059 அடியிறை கொண்ட செம்பொ
  னாடகச் சிலம்பி னாளக்
கடியறை மருங்கி னின்ற
  மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கடைக்க ணோக்க
  நெஞ்சுதுட் கென்ன வார்பூங்
கொடியுற வொசிந்து நின்றாள்
  குழைமுகத் திருவோ டொப்பாள்.

   (இ - ள்.) அடிஇறை கொண்ட ஆடகச் செம்பொன் சிலம்பினாள் - அடியிலே தங்குதல் கொண்ட ஆடகப் பொன்னாலான சிலம்பினாளாகிய; குழைமுகத் திருவோடு ஒப்பாள் - குழை முகத்தினையுடைய திருவைப் போன்றவள்; அக் கடி அறை மருங்கில் நின்ற மைந்தனைக் கண்டு நாணி - அந்த மணவறை அருகிலே நின்ற சீவகனைக் கண்டு வெட்கமுற்று; வடியுறு கடைக்கண் நோக்க - மாவடுவனைய கடைக்கண் அவனை நோக்க; நெஞ்சு துட்கு என்ன - நெஞ்சம் திடுக்கிட; வார் பூங்கொடி உற ஒசிந்து நின்றாள் - நீண்ட பூங்கொடிபோல வளைந்து நின்றாள்.

   (வி - ம்.) கடியறை - மணவறை. சீவகன் அக் கிழ வடிவத்தை விட்டுப் பழைய வடிவத்தோடு நின்றான் என்பது தோன்ற 'மைந்தனைக் கண்டு' என்றார். கொடியுற என்புழி உற என்பது உவமஉருபு.

( 65 )
2060 இலங்குபொன் னோலை மின்ன
  வின்முகஞ் சிறிது கோட்டி
யலங்கலுங் குழலுந் தாழ
  வருமணிக் குழையோர் காதிற்