பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1180 

அனைய காளை வெள்வளைக்கு இதனைச் சொன்னான் - சிங்கத்தைப் போன்ற காளையாகிய சீவகன் வெள்வளையுடைய சுரமஞ்சரியை நோக்கி இதனை இயம்பினான்.

   (வி - ம்.) தகரம் - தகர விறகு. கட்டி - நேர்கட்டி என்னுமொரு மணப்பொருள். புலம்பு - குற்றம். அமளி - படுக்கை. விலங்கரசு - சிங்கம்.

( 98 )
2093 கருமநீ கவல வேண்டா
  கயற்கணாய் பிரிவல் சின்னா
ளருமைநின் கவினைத் தாங்க
  லதுபொரு ளென்று கூறப்
பெருமநீ வேண்டிற் றல்லால்
  வேண்டுவ பிறிதொன் றுண்டோ
வொருமைநின் மனத்திற் சென்றே
  னுவப்பதே யுவப்ப தென்றாள்.

   (இ - ள்.) கயற்கணாய்! - கயலனைய கண்ணாய்!; கருமம் - ஒரு காரியமுளது; நீ கவல வேண்டா - நீ வருந்த வேண்டா, சில்நாள் பிரிவல் - சில நாட்கள் நின்னைப் பிரிவேன்; அருமை நின் கவினைத் தாங்கல் - (அப்போது நீ) அருமையாகிய நின் அழகைத் தாங்யிருப்பாயாக; அது பொருள் - அதுவே நின் கடமையான பொருளாகும்; என்று கூற - என்றுரைக்க; பெரும! - பெரியோனே!; நீ வேண்டிற்று அல்லால் - நீ விரும்புவதனை யல்லாமல்; வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ? - வேண்டுவது வேறொன்றுண்டோ?; ஒருமை நின்மனத்தின் சென்றேன் - யான் ஒரு தன்மையான நின்னுடைய மனம்போல ஒழுகினேன் (ஆதலின்); உவப்பதே உவப்பது என்றான் - நின் மனவிருப்பமே என் விருப்பம் என்றாள்.

   (வி - ம்.) தாங்கல் : அல்லீற்று வியங்கோள். வேண்டுவ பிறிதொன்றுண்டோ : பன்மையொருமை மயக்கம்.

( 99 )
2094 நாணொடு மிடைந்த தேங்கொ
  ணடுக்குறு கிளவி கேட்டே
பூண்வடுப் பொறிப்பப் புல்லிப்
  புனைநலம் புலம்ப வைகேன்
றேன்மிடை கோதை யென்று
  திருமக னெழுந்து போகி
வாண்மிடை தோழர் சூழத்
  தன்மனை மகிழ்ந்து புக்கான்.