பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1193 

   மகளிர்க்கு நன்கனம் வகுத்த - ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்' (2 : 101-31) என மணிமேகலையிற் கூறப்பட்டன காண்க.

( 6 )
2108 புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்
  பொன்னிணர்ப் பிண்டியும் பொருந்தி
மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்
  மலர்சொரி வகுளமு மயங்கிக்
கதிர்த்ததண் பூணி கம்புடாழ் பீலிக்
  கனைகுர னாரைவண் டான
மெதிர்த்ததண் புனல்சூ ழின்னதிக் கரைமே
  லிளையவ ரயாவுயிர்த் தெழுந்தார்.

   (இ - ள்.) புதுக்கலம் போலும் பூங்கனி ஆலும் - குயவரின் புதுக்கலம் போன்ற பொலிவுற்ற பழத்தையுடைய ஆலமரமும்; பொன் இணர்ப் பிண்டியும் பொருந்தி - பொன் போன்ற பூங்கொத்துக்களையுடைய அசோக மரமும் பொருந்தி; மதுக் கலந்து ஊழ்த்துச் சிலம்பி வீழ்வனபோல் மலர்சொரி வகுளமும் மயங்கி - முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி; கதிர்த்த தண்பூணி கம்புள் தாழ்பீலிக் கனைகுரல் நாரை வண்டானம் எதிர்த்த - கதிர்ப்பையுடைய தண்ணிய பூணியென்னும் பறவையும் சம்பங்கோழியும், சிறுசின்னம் போலும் செறிந்த குரலையுடைய நாரையும், வண்டானமும் எதிர்கொண்ட; தண்புனல் சூழ் இன் நதிக்கரைமேல் இளையவர் அயாவுயிர்த்து எழுந்தார் - தண்ணிய நீர் சூழ்ந்த ஆற்றங்கரை மேலே சீவகன் முதலான இளையோர் இளைப்பாறிப் போனார்.

   (வி - ம்.) பூணி, கம்புள் என்பன இறந்த வழக்கென்பர் நச்சினார்க்கினியர்.

   கலம் - ஈண்டுக் குயக்கலம்; இஃது ஆலம்பழத்திற்குவமை, ஆல் - ஆலமரம். சிலம்பி மகிழம்பூவிற்கு உவமை. வகுளம் - மகிழமரம். கம்புள் - சம்பங்கோழி. சிறு சின்னம் - ஒருவகை இசைக்கருவி. வண்டானம் - ஒருவகை நாரை; (கொய்யடி நாரை என்ப.) அயாவுயிர்த்தல் - இளைப்பாறுதல். ஆலும், பிண்டியும், வகுளமும் மயங்கி. பூணி, கம்புள், நாரை வண்டானம் எதிர்த்த தண்புனல்சூழ் இன்னதிக்கரைமேல் அயாவுயிர்த்து எழுந்தார் என வினை முடிபு செய்க.

( 7 )
2109 அள்ளிலைப் பலவி னளிந்து வீழ் சுளையுங்
  கனிந்துவீழ் வாழையின் பழனும்
புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூன்
  ஞெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்