பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 121 

   (வி - ம்.) எனவே [வைகறையிற் கண்டதால்] கடிதிற் பயக்குமாறாயின. இவை பிற்பயக்கும் கனவாதலின் பின்னும் நெஞ்சில் தோன்றின.

 

   கனா - ஈற்றாகாரம் குறுகிக் கன என நின்றது. விடிந்ததை : ஐ : சாரியை; வினைத்திரி சொல் என்பர் நச்சினார்க்கினியர் (சீவக. 223) ஆயிடை : சுட்டு நீண்டது.

( 190 )
220 பண்கெழு மெல்விர லாற்பணைத் தோளிதன்
கண்கழூஉச் செய்து கலைநல தாங்கி
விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய
வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள்.

   (இ - ள்.) பணைத்தோளி - மூங்கிலனைய தோளி; பண்கெழு மெல்விரலால் கண்கழூஉச் செய்து - யாழொடு பழகிய தன் மெல்லிய விரலாற் கண்களைக் கழுவி; கலைநல தாங்கி-நல்ல ஆடையணிந்து; விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய வண்புகழ் மால்அடி வந்தனை செய்தாள் - வானவர் பெய்யும் பூமழையையும் தீவினையை வெல்லும் அறவாழியையும் வளவிய புகழையும் உடைய அருகப்பெருமானடியை வணங்கினாள்

 

   (வி - ம்.) பண் : [யாழ் நரம்புக்கு] காரிய ஆகுபெயர்; யாழொடு பயின்ற விரலும் [வந்தனை செய்தாள் என வருதலாற் கையை உணர்த்தியது கொண்டு] சினை ஆகுபெயர். கழூஉச் செய்து, ‘நல்ல, மரூஉச் செய்து‘ (நாலடி. 246) என்பதுபோல நின்றது. விண் : [இட] ஆகுபெயர். தீவினையை வெல்லும் அறவாழி.

 

   ‘தெய்வம் அஞ்சல்‘ (தொல்- மெய்ப். 24) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரம். தன்குல தெய்வத்தை வணங்குதற்கு விதியாமாறு உணர்க. [‘தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள்‘ என்பது தமிழ் மறையாதலின் இவ்வாறு நச்சினார்க்கினியர் விளக்கங் கூறினார்.]

( 191 )
221 இம்பரி லாநறும் பூவொடு சாந்துகொண்
டெம்பெரு மானடிக் கெய்துகென் றேத்தி
வெம்பரி மானெடுந் தோ்மிகு தானையத்
தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே.

   (இ - ள்.) இம்பர்இலா நறும் பூவொடு சாந்து கொண்டு - இவ்வுலகில் நிகர் இல்லாத நறிய மலரையும் சந்தனத்தையும் கொண்டு; எம்பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி - எம்பெருமானே! நின் அடிக்கு இவை பொருந்துவன ஆகுக என்று பரவி ; வெம்பரிமான் நெடுந்தேர் மிகுதானை அத்தம் பெருமான் அடிசார்ந்தனள் - வெம்மையுறுங் குதிரையும் நெடுந்தேரும் மிகுந்த படையையுடைய தன் கணவன் அடியை வணங்கினாள்.