பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1230 

2176 வீங்குநீர் விதையத் தார்கோன்
  கட்டியங் காரன் றன்னோ
டாங்கவ னொருவ னாகி
  யன்பெனு மயில்கொள் வாளால்
வாங்கிக்கொண் டுயிரை யுண்பான்
  வஞ்சத்தாற் சூழ்ந்த வண்ண
மோங்குநீ ரோத வேலிக்
  குணரயா முரைத்து மன்றே.

   (இ - ள்.) வீங்குநீர் விதையத்தார் கோன் - பெருநீர்ப் பரப்புடைய விதைய நாட்டு மன்னனாகிய கோவிந்தன்; கட்டியங்காரன் தன்னோடு கட்டியங்காரனோடு; ஆங்கு அவன் ஒருவனாகி - கூடியிருந்து; அன்பு எனும் அயில்கொள் வாளால் - அன்பாகிய கூரிய வாளினால்; உயிரை வாங்கிக்கொண்டு உண்பான் - உயிரை அகப்படுத்திப் பருகுதற்கு; வஞ்சத்தால் சூழ்ந்த வண்ணம் - வஞ்சத்தினாலே ஆராய்ந்த செய்தியை; ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் - பெருகும் நீரையுடைய கடலை வேலியாகக் கொண்ட உலகிற்கு விளங்க யாம் கூறுவோம்.

   (வி - ம்.) அன்பு : சீவகன்; உவமையாகு பெயர்.

   வீங்கு நீர் : வினைத்தொகை. விதையத்தார்கோள் : கோவிந்தன். ஆங்கு - அவ்விடத்தே. ஒருவனாதல் - கூடுதல், அயில் - கூர்மை. உண்பான்; வினையெச்சம் ஓதவேலி - உலகம்: அன்மொழித்தொகை. உரைத்தும் : தன்மைப்பன்மை; இது புலவர் கூற்று.

( 75 )
2177 பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையன்மாலை
யொருமக ணோக்கி னாரை யுயிரோடும் போக டாத
திருமக ளவட்குப் பாலா னருந்திரி பன்றி யெய்த
வருமக னாகு மென்றாங் கணிமுர சறைவித் தானே.

   (இ - ள்.) பெருமகன் காதல் பாவை - கோவிந்தனின் அன்புக்குரிய பாவையாகிய; பித்திகைப் பிணையல் மாலை ஒரு மகள் - குருக்கத்தியாற் பிணைந்த மாலையை யுடைய ஒப்பற்ற மகள்; நோக்கினாரை உயிரொடும் போகவிடாத-தன்னை நோக்கினாரை உயிருடன் போக விடாத; திருமகள்-திருமகள் போன்றாள்; அவட்குப் பாலான் - அவளுக்குக் கணவனாகத் தக்கான்; அருந் திரிபின்றி எய்த அருமகன் ஆகும் - அரிய திரி பன்றியை அடித்து வீழ்த்திய அரிய மகனாவான்; என்று ஆங்கு அணி முரசு அறைவித்தான் - என்று அங்கெல்லாம் அழகிய முரசைச் சாற்றுவித்தான்.