பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1309 

2317 நல்லொளிப் பவளச் செவ்வாய்
  நன்மணி யெயிறு கோலி
வில்லிட நக்கு வீர
  னஞ்சினா யென்ன வேந்தன்
வெல்வது விதியி னாகும்
  வேல்வரி னிமைப்பே னாயிற்
சொல்லிநீ நகவும் பெற்றாய்
  தோன்றன்மற் றென்னை யென்றான்.

   (இ - ள்.) வீரன் (அதுகேட்ட) சீவகன்; நல் ஒளிப் பவளச் செவ்வாய் நல்மணி எயிறு கோலி வில்லிட நக்கு - அழகிய ஒளியை உடைய பவளம் அனைய செவ்வாயில் அழகிய முத்தனைய பற்கள் வரிசையாக ஒளிவிட நகைத்து; அஞ்சினாய் என்ன - நீ அஞ்சினை என்று கூற; வேந்தன் - (அதற்குக்) கட்டியங்காரன்; வெல்வது விதியின் ஆகும் - வென்றி கொள்வது ஊழினாலே உண்டாகும்; தோன்றல் - தோன்றலே!; வேல்வரின் இமைப்பேன் ஆயின் - நின் கையில் வேல் என்மேல் வரும்போது இமைத்தேன் எனின்; சொல்லி நீ என்னை நகவும் பெற்றாய் என்றான் - (அப்போது) இம் மொழியைக் கூறி நீ என்னை நகைக்கக் கடவை என்று கூறினான்.

   (வி - ம்.) கட்டியங்காரன் ஊழ்வலியை எண்ணிக் குறைந்தே நின்றால், கொல்வது அரிது என்று கருதிச் செற்றமுண்டாக்கக் கருதி 'அஞ்சினாய்' என்றான். பெற்றாய் : கால வழுவமைதி.

( 216 )
2318 பஞ்சிமெல் லடியி னார்தம்
  பாடகந் திருத்திச் சேந்து
நெஞ்சுநொந் தழுத கண்ணீர்
  துடைத்தலி னிறைந்த கோல
வஞ்சனக் கலுழி யஞ்சே
  றாடிய கடக வண்கை
வெஞ்சிலை கொண்டு வெய்ய
  வுருமென முழங்கிச் சொன்னான்.

   (இ - ள்.) பஞ்சி மெல்லடியினார் தம் பாடகம் திருத்திச் சேந்து - பஞ்சு போன்ற மெல்லிய அடியையுடைய மகளிரின் பாடகம் என்னும் காலணியைத் திருத்திச் சிவந்து; நெஞ்சு நொந்து அழுத கண்ணீர் துடைத்தலின் - மனம் வருந்தி அழுத கண்ணீரைத் துடைப்பதால்; நிறைந்த கோல அஞ்சனக் கலுழி