பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1312 

2322 மொய்வார் குழலார் முலைப்போர்க்கள
  மாய மார்பிற்
செய்யோன் செழும்பொற் சரஞ்சென்றன
  சென்ற தாவி
வெய்தா விழியா வெகுவத்துவர்
  வாய்ம டியா
மையார் விசும்பின் மதிவீழ்வது
  போல வீழ்ந்தான்.

   (இ - ள்.) மொய்வார் குழலார் முலைப் போர்க்களம் ஆய மார்பில் - நெருங்கிய நீண்ட குழலையுடைய மங்கையரின் முலைகளுக்குப் போர்க்களமான மார்பிலே; செய்யோன் செழும் பொன் சரம் சென்றன - ஞாயிறு போன்ற சீவகனுடைய செழுவிய பொற்கணைகள் சென்று பாய்ந்தன; ஆவி சென்றது - (அதனால்) கட்டியங்காரனுடைய உயிர் நீக்கியது; வெய்தா விழியா வெருவத்துவர் வாய் மடியா - வெப்பமுற விழித்துக் கண்டார் அச்சமுறச் செவ்வாயை மடித்து; மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான் - முகில் நிறைந்த வானிலிருந்து திங்கள் வீழ்வதுபோல வீழ்ந்தான்.

   (வி - ம்.) சச்சந்தனை, 'வெஞ்சுடரின் ஆண்டகை அவிந்தான்' (சீவக. 289) என்று ஞாயிற்றினோடு உவமை கூறிப் போந்து, அவன் புதல்வன் அவனேயாமாதலின், ஈண்டும் சீவகனைச் செய்யோன் என்று ஞாயிறாக்கி, அஞ்ஞாயிற்றின் முன்னே மதி நில்லாது கெடும் என்பது தோன்ற, 'மதி' வீழ்வதுபோல வீழ்ந்தான்' என்றார்.

   மேகத்தை யானைக்குவமை, கூறினார். இதனால், சச்சந்தன் பட்ட அன்றுதொட்டு இன்றளவும் கட்டியங்காரன் கொடுங்கோலிருள் பரப்ப அரசாண்ட தன்மையும், அதுதான் இராக் காலத்தே இருள் பரந்து நிற்ப மதியாண்ட தன்மைத்தென்றும் கூறினாராயிற்று.

( 221 )

வேறு

2323 கட்டியங் கார னென்னுங்
  கலியர சழிந்த தாங்குப்
பட்டவிப் பகைமை நீங்கிப்
  படைத்தொழி லொழிக வென்னாக்
கொட்டினர் முரச மள்ள
  ரார்த்தனர் குருதிக் கண்ணீர்
விட்டமு தவன்க ணார்வ
  மண்மக ணீக்கி னாளே.