பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1322 

யாணரூர் அமராபதி போன்றது - புத்தழகு பெற்ற இராசமாபுரம் அமராவதியைப் போன்றது.

   (வி - ம்.) அமராவதி : வானவர் நாட்டின் தலைநகர்.

   வீணை வித்தகன் என்றது சீவகனை. வேந்தடுதோள், வீங்குதோள் என இயைக்க. காரிகையார் - அழகியர். யாணர்ஊர் - புதுவருவாயினையுடைய இராசமாபுரம்.

( 9 )
2336 தேம்பெய் கற்பகத் தாரவன் சோ்தலும்
பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநல
மோம்பு திங்க ளுலந்து சுடர்கண்ட
வாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே.

   (இ - ள்.) தேன்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும் - தேன் சொரியும் கற்பக மாலையான் அரண்மனையை அடைந்தவுடன்; பூபெய் கோதைப் புரிசைக்குழாம் நலம் - மலர் பெய்த மாலை அணிந்த, மதிலிடத்திருந்த மகளிரின் அழகு; ஓம்பு திங்கள் உலந்து - இரவை ஓம்பிய திங்கள் மறைந்து; சுடர்கண்ட ஆம்பல் ஆய்மலர்க் காடு ஒத்து அழிந்தது - ஞாயிற்றைக் கண்ட ஆம்பலின் குவிந்த மலர்க் காட்டைப் போன்று கெட்டது.

   (வி - ம்.) தாரவன் : சீவகன், பூங்கோதை, பெய்கோதை எனத் தனித்தனி கூட்டுக. புரிசை - மதில், சுடர் - சிறப்பால் ஞாயிற்றை உணர்த்திற்று.

( 10 )

வேறு

2337 மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோ
லாகம் மறவ ரகன்கோயில்புக் கம்பொன் மாலைத்
தோகைம் மடவார் துவர்வாய் துடித் தஞ்ச வெம்பா
வேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகுகென்றார்.

   (இ - ள்.) மறவர் அகன் கோயில் புக்கு - அப்போது வீரர்கள் பெரிய அரண்மனையிலே நுழைந்து; மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்பவே போல் ஆக - முகில் முழக்கினால் மணியையுடைய பாம்புகள் துடிப்பன போல் ஆம்படி; அம் பொன் மாலைத் தோகை மடவார் துவர்வாய் துடித்து வெம்பா அஞ்ச - அழகிய பொன்மாலை அணிந்த மயிலனைய மங்கையர், தம் சிவந்த வாய் துடித்து வெம்பி நடுங்க; வேகம் உடைத்தாய் விழியா - விரைவுடனே விழித்துப் பார்த்து; தொழித்து ஏகுக என்றார் - சினந்து இவ்விடத்தினின்றும் ஏகுக என்றனர்.

   (வி - ம்.) அழாமற் பொருமுதலின் வாய்துடித்தது.