கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாயிருத்தலின், கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயற்றலின், தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியுங் கொடுத்தலின், அமிர்து. காம வேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றுவித்தலின், யாழ். கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின், திரு. நடையால், அன்னம், சாயலால். மயில். காலமன்றியும் கேட்டோர்க்கு இன்பஞ் செய்தலின், குயில். மன்னன் மகளே யென்றல் புகழன்மையின், மன்னன் பாவாயென்றது. அவன் கண்மணிப் பாவை யென்பதுணர்த்திற்று : இனி, இவள் கொல்லிப் பாவையல்லள் மன்னன் பாவை என்றுமாம். சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின், பூவை. நோக்கத்தால். மான்.
|