பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1425 

2527 ஒள்ளிலைச் சூலந் தெண்ணீ
  ருலாமுகில் கிழிக்கு மாடக்
கொள்கொடிக் குழாத்தி னாலுங்
  கொழுநறும் புகையி னாலுந்
தௌ்ளுறு சுண்ணத் தாலுந்
  தேமலர்த் துகளி னாலும்
புள்ளினம் பொழுது காணா
  புலம்பிக்கூ டடைந்த வன்றே.

   (இ - ள்.) ஒள் இலைச் சூலம் தௌ்நீர் உலாம் முகில் கிழிக்கும் மாடத்து - ஒள்ளிய இலையையுடைய சூலம் தெளிந்த நீர் பரந்த முகிலைக் கிழிக்கும் மாடத்திலே; கொள் கொடிக் குழாத்தினாலும் - கொண்ட கொடித்திரளாலும்; கொழுநறும் புகையினாலும் - வளவிய நல்ல அகிற் புகையினாலும்; தௌ்ளுறு சுண்ணத்தாலும் - தெளிந்த சுண்ணப் பொடியாலும்; தேன் மலர்த்துகளினாலும் - தேன் பொருந்திய பூந்துகளாலும்; புள் இனம் பொழுது காணா - பறவைத்திரள் கதிரவனைக் காணாமல்; புலம்பிக் கூடு அடைந்த - வருந்திக் கூட்டை அடைந்தன.

   (வி - ம்.) கதிரவன் மறைதலிற் காணாமல் வருந்தின. 'தௌ்நீர் உலாம் முகில்' என்பது கடலிலே யுலாவும் முகில் என்றுமாம். உலாவும் என்பது 'உலாம்' என விகாரப்பட்டது.

   கொள்கொடி : வினைத்தொகை. சுண்ணம் - நறுமணப் பொடி. மலர்த்துகள் - பூந்தாது. காணா - காணாதனவாய். புலம்பி - வருந்தி.

( 150 )
2528 பைந்தொடி மகளிர் பாங்கர்
  பரிந்துநூல் சொரிந்த காசு
சிந்தின தழலென் றஞ்சிச்
  சிறையன்ன நிலத்தைச் சேரா
விந்திர கோப மாமென்
  றிளமயில் குனிந்து குத்திச்
சிந்தையிற் றேம்பத் தாமே
  திருமணி நக்க வன்றே.

   (இ - ள்.) பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்து - பைந்தொடி அணிந்த மகளிர் (ஊடியபோது கணவர் மேகலையைப் பற்றுதலால்) அது அற்று; நூல் சொரிந்த காசு - நூல் சொரிந்த மணிகள்; சிந்தின - சிந்தினவற்றை; தழல் என்று அஞ்சி -